NATIONAL

கோவிட்-19 சோதனை முடிவுகளை இனி மைசெஜாத்ராவில் பதிவேற்ற வேண்டியதில்லை

கோலாலம்பூர், ஜூலை 17 – கோவிட்-19 சோதனை முடிவுகளை இனி மைசெஜாத்ரா செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக இ-நோட்டிபிகாசி (eNotifikasi) எனும் முறையின் மூலம் மருத்துவர்களால் தெரிவிக்கப்படும். இந்த புதிய  உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்ததாக சுகாதார அமைச்சு கூறியது.

கோவிட்-19 நோயை  உறுதிப்படுத்தும் சோதனைகள் இனி தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் ரெப்பிட் டெஸ்ட் கிட் ஆன்டிஜென் அல்லது பாலிமரேஸ் செயின் ரியாக்சன் சோதனைகளைப் பயன்படுத்தி மட்டுமே நடத்தப்படும்.

இந்த பரிசோதனைகள் சிகிச்சை நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றனவே தவிர நோய் கண்டறிதலுக்காக அல்ல என்று அமைச்சு தனது முநூலில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.

அண்மைய  கோவிட்-19 மேலாண்மை வழிகாட்டிகளை https://covid-19.moh.gov.my/garis-panduan/garis-panduan-kkm என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இ-நோட்டிபிகாசி  என்பது சுகாதார அமைச்சு  மற்றும் அனைத்து சுகாதார மையங்களால் பயன்படுத்தப்படும்  நாட்டிற்குள் ஏற்படும் தொற்று நோய்களைக் கண்காணித்து அறிவிக்கும் ஒரு அமைப்பாகும்.

தொற்றுநோயுடன் வாழும் நிலைக்கு மலேசியா மாறியதைத் தொடர்ந்து கோவிட்-19 தொடர்பான நிலையான செயலாக்க நடைமுறைகள் பற்றிய விரிவான திருத்தங்களை அமைச்சு வெளியிடும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது முன்னதாகக் கூறியிருந்தார்.


Pengarang :