NATIONAL

நுர் ஃபாரா கார்தினி மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

கோலாலம்பூர், ஜூலை 17- நுர் ஃபாரா கார்தினியின் உடல்
கண்டுபிடிக்கப்பட்ட போது அவரின் நெஞ்சு மற்றும் முகம் அழுகிய
நிலையில் காணப்பட்டதால் அவரின் மரணத்திற்கான காரணத்தை
இன்னும் உறுதிப்படுத்த இயலவில்லை.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு ஏதுவாக அந்த
உடலிலிருந்து எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளை சுங்கை பூலோ
மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள் ஆய்வகச் சோதனைக்கு
உட்படுத்த வேண்டியுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்
டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

உடலின் முகம் மற்றும் நெஞ்சுப் பகுதி அழுகிய நிலையில்
காணப்படுவதால் அப்பெண்ணின் மரணத்திற்கான காரணம் இன்னும்
கண்டறியப்படவில்லை. ஆய்வகச் சோதனை முடிவுகளின்
அடிப்படையில்தான் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியும்
என்று அவர் தெரிவித்தார்.

இந்த கொலை தொடர்பான விசாரணைக்காக சந்தேகப் பேர்வழிக்குச்
சொந்தமான டோயோட்டார் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
என்று அவர் குறிப்பிட்டார்.

இருபத்தைந்து வயதான நுர் ஃபாராவின் உடல் உலு சிலாங்கூர், கம்போங்
ஸ்ரீ கிளேடாங்கில் உள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் கடந்த
திங்கள்கிழமை மாலை 6.00 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

இம்மாதம் 10ஆம் தேதி வாடகைக் காரை வாடிக்கையாளரிடம்
ஒப்படைப்பதற்காக சென்ற அவர் அதன் பின்னர் காணாமல் போனதாக
தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேராக் மாநிலத்தில் போலீஸ்காரராகப் பணி புரியும்
26 நபர் கைது செய்யப்பட்டு வரும் 22ஆம் தேதி வரை தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டுள்ளார்.


Pengarang :