NATIONAL

நவம்பர் 11க்குள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவு

ஷா ஆலம், ஜூலை 17-  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் நவம்பர் 11ஆம் தேதிக்குள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற கிளினிக்கில் அல்லது தனியார் மருத்துவ மையங்களில் அந்த பரிசோதனையைச் செய்யலாம் எனக் கூறிய அவர், இந்த உத்தரவுக்கு  இணங்கத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.

மருத்துவப்  பரிசோதனைக்குத் தேவையான விவரங்கள் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில்  இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மருத்துவ பரிசோதனை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்டாயமாகும். இதற்கான கடைசி தேதி  நவம்பர் 11ஆம் தேதி திங்கட்கிழமையாகும். நாடாளுமன்ற  கிளினிக் அல்லது தனியார் மருத்துவ மையங்களில்  மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றார் அவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற கிளினிக்  தலைவர் மற்றும் நாடாளுமன்ற சுகாதார ஆலோசகருமான டாக்டர் முருகேசு ராஜுவிடம் இருந்து கூடுதல் தகவல்களைப் பெற வேண்டும் என்று அவர் இன்று மக்களவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன் கூறினார்.


Pengarang :