NATIONAL

எதிர்கால அச்சுறுத்தல்களை சமாளிக்க தேசிய சுகாதார  நிதி – அமைச்சு திட்டம் 

கோலாலம்பூர், ஜூலை 17 – நுண்ணுயிர் எதிர்ப்பு (ஏஎம்ஆர்) உள்ளிட்ட சாத்தியமான உடல்நல அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை தயார்படுத்துவதற்காக தேசிய சுகாதார நிதியைத்  தொடங்க பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்ட யாரும் சிகிச்சை பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை  இந்த உத்தேசத் திட்டம் உறுதி செய்யும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி  அகமது கூறினார்.

ஏ.எம்.ஆர். என்பது ஆண்டிபயோட்டிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு  மருந்துகளால்  எதிர்த்துப் போராட முடியாத ஒரு நிலையாகும்  என்று அவர் சொன்னார்.

இன்று பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் திடீரென்று பயனற்றதாகிவிட்டன என்று கற்பனை செய்து பாருங்கள். இது சுகாதார நிதி சம்பந்தப்பட்டது. ஆகவே,  நாம் நிதி ரீதியாக தயாராக இருப்பது முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு என  வரும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை  அவசியமாகும்.  தொற்றுநோய்கள், ஏ.எம்.ஆர். உட்பட எந்தவொரு சுகாதாரப் பேரிடர்களிலிருந்து  யாரும் விட்டுவிடக்கூடாது என்பது உலக சுகாதார அமைப்பின் தாரக மந்திரமாகும் என்று அவர் கூறினார்.

மக்களவையில் இன்று  கேள்வி-பதில் அங்கத்தின்போது ஏ.எம்.ஆர்.அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த நிதி எவ்வாறு நாட்டுக்கு உதவும் என்று  பூலாய் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் சுஹைசன் கையாட் எழுப்பிய துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு  பதிலளித்தார்.

நாட்டின் சுகாதார மாற்றத்தை பாதிக்கும் மேக்ரோ பொருளாதாரம், நிர்வாக மற்றும் அரசியல் கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சு அறிந்திருப்பதாகவும் சுகாதார நிதி அமைப்பின் சீர்திருத்தத்தின் திசையை அது நன்றாகச் சரிசெய்து வருவதாகவும் ஜூல்கிப்ளி  கூறினார்.


Pengarang :