NATIONAL

சக குடியிருப்பாளரை 11 முறை கத்தியால் குத்திய ஆடவர்- டேசா மெந்தாரியில் சம்பவம்

கோலாலம்பூர், ஜூலை 18 – சக குடியிருப்பாளரால் 11 முறை கத்தியால்
சரமாரியாகக் குத்தப்பட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் வீட்டில் இரத்த
வெள்ளத்தில் கிடக்கக் காணப்பட்டார். இச்சம்பவம் பெட்டாலிங் ஜெயா,
சன்வே, டேசா மெந்தாரி அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நிகழ்ந்தது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலுள்ள ஒரு வீட்டில்
ஆடவர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில்
கிடப்பது தொடர்பில் அதிகாலை 5.45 மணியளவில் தாங்கள் பொது
மக்களிடமிருந்து புகாரைப் பெற்றதாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி ஷஹாருள்நிஸாம் ஜாபர் கூறினார்.

சம்பவம் இடத்திற்கு உடனே விரைந்த போலீசார் ஆடவர் ஒருவர் வீட்டின்
வரவேற்புக் கூடத்தில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டனர். அதே
சமயம் தப்பியோடும் நோக்கில் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்ததாக
நம்ப்படும் சந்தேகப் பேர்வழி கீழ்த்தளத்தின் தரையில் கிடக்கக்
காணப்பட்டார் என்று அவர் சொன்னார்.

உயரத்திலிருந்து குதித்ததால் அந்த சந்தேகப் பேர்வழிக்கு இடுப்பில் முறிவு
ஏற்பட்டதோடு வலது விலா எழும்பும் உடைந்தது என்று அவர் நேற்று
இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சுங்கை பூலோ மருத்துவமனையின்
மருத்துவக் குழு கத்திக் குத்துக் காயங்களுக்குள்ளான நபருக்கும் சந்தேகப்
பேர்வழிக்கும் முதலுதவிச் சிகிச்சை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு
கொண்டுச் செல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக
நம்பப்படும் கத்தி ஒன்றையும் போலீசார் சம்பவ இடத்திலிருந்து மீட்டனர்
என்றார் அவர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 326வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர்,
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 03-79662222 என்ற
எண்களில் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை
அறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.


Pengarang :