NATIONAL

ரோன்95 இலக்கு மானியம் பாடு தரவுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்-பொருளாதார அமைச்சு தகவல்

கோலாலம்பூர், ஜூலை 18 – ரோன்95 பெட்ரோலுக்கான இலக்கு மானியத்
திட்ட செயலாக்கத்தில் பாடு எனப்படும் மத்திய தரவுத் தளத்தின் தரவுகள்
முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்பதோடு குடும்ப நிகர செலவழிப்பு
வருமானத்தையும் அது அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று
பொருளாதார அமைச்சு கூறியது.

இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை 1 கோடியே 5 லட்சத்து 50
ஆயிரம் பேர் பாடு தரவுத் தளத்தில் தனிநபர் விபரங்களைப் பதிவு
செய்துள்ளதாக அது தெரிவித்தது.

அந்த செயல்முறை தற்போது இரண்டாம் கட்ட ஆய்வில் உள்ளது. குடும்ப
விபரங்களை தீர்மானிப்பதற்கான தரவு ஆய்வுகள், நியாயமான செலவுகள்
மற்றும் நிகர செலவழிப்பு வருமானம் ஆகியவற்றை அந்த ஆய்வு
உட்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட
அமைச்சின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவையில், பாடு தரவுத் தளத்தில் பதிவு செய்தவர்களின் மொத்த
எண்ணிக்கை குறித்தும் டீசல் இலக்கு மானிய அமலாக்கத்தின் போது ஏன்
பாடு தரவுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் மூவார் தொகுதி மூடா
கட்சி உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் எழுப்பியக்
கேள்விக்கு அமைச்சு இந்த பதிலை வழங்கியது.

எரிபொருள் உதவித் தொகையை மறுஇலக்கிடுவது தொடர்பான
நடவடிக்கைகள் பூடி மடாணி திட்டத்தின் வாயிலாக
தொடங்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

அரசாங்கத்தின் வசமுள்ள நடப்பு தரவுகளின் அடிப்படையில் பூடி மடாணி
திட்டத்தின் மூலம் இலக்கிடப்பட்ட டீசல் மானியத் திட்டம்
அமல்படுத்தப்பட்டதாவும் அமைச்சு கூறியது.


Pengarang :