SELANGOR

ஜூலை 5 முதல் பிங்காஸ் திட்டத்திற்கு 35,824 பேர் விண்ணப்பம்

ஷா ஆலம், ஜூலை 18 – பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு
உதவித் திட்டத்திற்குக் கடந்த ஜூலை 5ஆம் தேதி புதிய விண்ணப்பங்கள்
திறக்கப்பட்ட நிலையில் இதுவரை 35,824 பேரிடமிருந்து விண்ணப்பங்கள்
கிடைக்கப்பெற்றுள்ளதாக சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
அன்ஃபால் சாரி கூறினார்.

அந்த விண்ணப்பங்கள் யாவும் இரண்டு வாரம் முதல் ஒரு மாதக்
காலத்தில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி சேவை மையங்களால்
பரிசீலிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

மாதம் 300 வெள்ளி உதவித் தொகை வழங்க வகை செய்யும் இந்த
உதவித் திட்டத்தில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய
அவர், 10 கோடியே 80 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டிலான
இத்திட்டத்திற்கான குடும்ப வருமான வரம்பு 5,000 வெள்ளியாக
உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிபந்தனை தளர்வு குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை எந்த
வகையிலும் பாதிக்காது. காரணம் தொகுதி சேவை மையங்கள்
விண்ணப்பங்களை நன்கு ஆய்வு செய்து உண்மையிலே தகுதி
உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் என்றார் அவர்.

மேலும், தொகுதியிலுள்ள மக்கள் தொகை மற்றும் தேவையின்
அடிப்படையில் இந்த பிங்காஸ் திட்டத்திற்கான கோட்டா ஒதுக்கீட்டில்
மாநில அரசு மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

சில தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவை இன்னும்
முடிக்காமல் உள்ளன. ஆகவே, இந்த நடைமுறையை மாற்றி மக்கள்
அதிகம் உள்ள போர்ட் கிள்ளான் மேரு, பத்து தீகா போன்ற
தொகுதிகளுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்க விருக்கிறோம் என்று அவர்
குறிப்பிட்டார்.

சட்டமன்றத் தொகுதிகளின் தேவையைப் பொறுத்து நாங்கள் பிங்காஸ்
திட்ட உதவியை பகிர்ந்தளிக்கவிருக்கிறோம். வாக்காளர்கள் குறைவாக
இருந்தால் ஒதுக்கீட்டையும் குறைத்து விடுவோம். இதன் மூலம்
ஒதுக்கப்பட்ட கோட்டா முழுமையாக முடிக்கப்படுவதை உறுதி செய்ய
இயலும் என்றார் அவர்.

அதிகமானோர் பயன் பெறுவதற்கு ஏதுவாகப் பிங்காஸ் திட்டத்திற்கான
வருமான வரம்பு 3,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக
உயர்த்தப்படுவதாக அன்ஃபால் சாரி கடந்த 5ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :