NATIONAL

சுக்மா 2024: சிலாங்கூர் சார்பில் 704 விளையாட்டாளர்கள், 213 அதிகாரிகள் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூலை 18 – சரவாக் மாநிலத்தில்  வரும் ஆகஸ்ட் 17 முதல்  24 வரை நடைபெறும் 2024 மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) மாநிலத்தின் சார்பில் 704 விளையாட்டு வீரர்கள் மற்றும் 213 அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

ஜூலை 5 ஆம் தேதி பதிவு செய்யும் காலக்கெடுவிற்கு முன்னதாக அனைத்து விளையாட்டு வீரர்கள்   பயிற்சியாளர்கள் உட்பட அதிகாரிகள் ஈராண்டிற்கு ஒரு முறை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிக்கு  பட்டியலிடப் பட்டுள்ளதாக சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குனர் முகமட் நிஜாம் மர்ஜுக்கி கூறினார்.

ஆயத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக விளையாட்டு வீரர்களின் தயார் நிலையை அளவிடுவதற்கு தொடர்ச்சியான நட்பு முறை போட்டிகள் நடத்தப்பட்டு   அவர்களின் திறன் சோதிக்கப் படும் என்று அவர் தெரிவித்தார்.

சுக்மா போட்டிக்கு  704 விளையாட்டு வீரர்களின் பட்டியலை சிலாங்கூர் குழு இறுதி செய்துள்ளது. அவர்கள் அனைவரும் இப்போது அணி பயிற்சி மற்றும் தயார் பயிற்சியின் இறுதி கட்டத்தில் உள்ளனர்.

அனைத்து அணிகளும் சரவாக்கிற்குப் புறப்படுவதற்கு முன் இரண்டு வாரங்களுக்கு அந்தந்த விளையாட்டுகளுக்கு ஏற்ப ஓரிட மைய பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று அவர்  கூறினார் .

ஒன்பது முறை ஒட்டுமொத்த சாம்பியனாக வாகை சூடிய  சிலாங்கூர், இந்த முறை 61 தங்கப் பதக்கங்களை வெல்வதை  இலக்காகக் கொண்டுள்ளது. நீச்சல், தடகளம், வில்வித்தை, டென்னிஸ் மற்றும் பூப்பந்து ஆகியவை பதக்கங்களை பங்களிக்க எதிர்பார்க்கும் முக்கிய போட்டிகளாக விளங்குகின்றன..

குழு நிலையில் ஆண்களுக்கான கால்பந்து, கைப்பந்து, செப்பாக் தக்ராவ் மற்றும் கூடைப்பந்து ஆகியவை சிலாங்கூருக்கு தங்கப் பதக்கங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிஜாம் கூறினார்.

சிலாங்கூர், விளையாட்டு வீரர்களின் சீரான அணியைக் கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு விளையாட்டிலும் குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தையாவது பெற முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

வரும் ஆகஸ்டு 3 ஆம் தேதி அனைத்து  விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்க மருந்து மற்றும் காயம் மேலாண்மை பற்றிய விளக்கங்கள் வழங்கப்படும் என்றும் அதைத் தொடர்ந்து மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் கொடி வழங்கும் விழாவும் நடைபெறும் என்றும் நிஜாம் கூறினார்.

கடந்த 2022  சுக்மா போட்டியில் சிலாங்கூர் 31 தங்கம், 55 வெள்ளி மற்றும் 44 வெண்கலம் உள்ளிட்ட 130 பதக்கங்களை வென்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.


Pengarang :