NATIONAL

வெ.13.1 லட்சம்  மதிப்புள்ள வழக்கு ஆதாரப் பொருள்களை கோம்பாக் போலீசார் அழித்தனர்

கோம்பாக், ஜூலை 19 – கோம்பாக் மாவட்ட போலீசார் வழக்கின் ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட 13 லட்சத்து  10 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு பொருள்களை அழித்தனர்.

அழிக்கப்பட்ட பொருள்களில் சூதாட்டச் சாதனங்கள், கடத்தல் பொருள்கள், மதுபானங்கள், சிகிரெட், பிட்காயின் இயந்திரங்களும் அடங்கும்.

கடந்த 2020 முதல் இவ்வாண்டு வரை  திறக்கப்பட்ட 896 விசாரணை அறிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட 183,111 வழக்கு ஆதாரப் பொருள்கள் இந்நடவடிக்கையின் போது அழிக்கப்பட்டன என்று  கோம்பாக மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அரிஃபின் முகமது நாசீர் கூறினார்.

சுமார் 12 லட்சம் வெள்ளி மதிப்புள்ள இந்த ஆதாரப் பொருள்களை அழிக்கும் பணியை பொருள்களை  மாவட்டக் குற்றப் புலனாய்வுத் துறை மேற்கொண்டது என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் மாவட்ட வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை 110,000 வெள்ளி மதிப்புள்ள 100 ஆதாரப் பொருள்களை அழித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் திறக்கப்பட்ட 16 விசாரணை அறிக்கைகளில் இந்த ஆதாரப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான வழக்கு ஆதாரப் பொருள் அழிப்பு நிகழ்வைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அழிக்கப்பட்ட பொருள்களில் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 2,650 கணினிகள், மடிக்கணினிகள்,கைப்பேசிகள், பிரிண்டர்கள், 316 பிட்காயின் இயந்திரங்கள், சிகிரெட்டுகள், மதுபானங்கள் ஆகியவையும் அடங்கும் என்றார் அவர்.


Pengarang :