ANTARABANGSA

இஸ்ரேலை இடைநீக்கம் செய்ய பாலஸ்தீனம் முயற்சி- முடிவை ஒத்தி வைத்தது ஃபிபா

லண்டன், ஜூலை 19 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டி முடியும் வரை அனைத்துலக நிலையிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து இஸ்ரேலுக்கு தடை விதிக்க பாலஸ்தீனம் செய்துள்ள கோரிக்கை மீது முடிவெடுப்பதை ஃபிபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் ஒத்தி வைத்துள்ளது.

தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க இரு தரப்பும் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளதே முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்று ஃபிபா கூறியது.

காஸா போரை காரணம் காட்டி இஸ்ரேலை இடைநீக்கம் செய்ய பாலஸ்தீன கால்பந்து சங்கம் கடந்த மே மாதம் பரிந்துரையை தாக்கல் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து உடனடி சட்ட மதிப்பீட்டிற்கு உத்தரவிட்ட ஃபீபா, எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறும் அதன் கவுன்சில் கூட்டத்தின் போது இதன் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருந்தது.

அந்த சட்ட மதிப்பீடு எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி பகிர்ந்து கொள்ளப்படும் என அந்த உலக கால்பந்து அமைப்பு கடந்த நேற்று தெரிவித்தது.

தங்களின் நிலைப்பாட்டை தாக்கல் செய்வதற்கு இரு தரப்பும் கால அவகாசம் கோரியதைத்  தொடர்ந்து இந்த கோரிக்கையை முறையாக பரிசீலித்து முழுமையான தீர்வை அறிவிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என ஃபிபா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11ஆம் தேதி வரை நடைபெறும் ஆடவர் கால்பந்துப் போட்டி வரும் ஜூலை 24 ஆம் தேதி தொடங்கும்.

ஆண்கள் பிரிவில் தேர்வாகியுள்ள இஸ்ரேல் குழு மாலி, பராகுவே, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மோதுகிறது.


Pengarang :