NATIONAL

பெண் தொழில் முனைவோர் இலக்கவியல் தொழில்நுட்பத்தில் திறன் பெற்றிருக்க வேண்டும்

ஷா ஆலம், ஜூலை 19 – சிலாங்கூரில் உள்ள பெண் தொழில்முனைவோர் இலக்கவியல்  தொழில்நுட்பத் திறன்களில் தேர்ச்சி பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இதன் மூலம் மட்டுமே அவர்கள் மேம்பாடுகளுக்கு ஏற்ப தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருக்க முடியும் என்று மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் ஷாரி கூறினார்.

இலக்கவியல்மய ஈடுபாட்டின் மூலமாகவே  மகளிர் தங்கள் திறனையும சந்தை வாய்ப்புகளையும்  அதிகரிக்க முடியும்   என்று அவர் சொன்னார்.

மகளிரின் போட்டித்தன்மையை அதிகரிப்பது,  அவர்களின் சமூகப் பொருளாதாரம் மற்றும் சுய ஆளுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட  2024-2026
சிலாங்கூர் பெண்கள் கொள்கையிலும் இலக்கவியல் மற்றும் புத்தாக்க கலாசாரம்  சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்கினார்.

பெண் தொழில்முனைவோராக இருப்பதில் சவால் மிக அதிகமாக உள்ளது. நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பல மடங்கு  தாக்கங்களை ஏற்படுத்த  இலக்கவியல் மயமாக்கல் மற்றும் புத்தாக்கம் எங்களுக்கு  தேவைப்படுகிறது என்றார் அவர்.

உற்பத்தித்திறன் வரம்புகளைக் கடப்பதற்கு தொழில்நுட்பத்தின் தேர்ச்சி  முக்கியமாகும். எனவே 2025 ஆம் ஆண்டுக்குள் விவேக மாநிலம் என்ற இலக்கை அடைய இலக்கவியல்  தொழில்முனைவோரை உருவாக்குவதில் மாநில அரசு எப்போதும் உறுதி பூண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இளம் பெண் தொழில்முனைவோருக்கான (உசஹா வனிதா) 2024க்கான டிஜிட்டல் ஊடக ஊக்குவிப்புத் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :