ANTARABANGSA

கெடா மந்திரி புசாருக்கு எதிரான நிந்தனை வழக்கு இன்று தொடங்குகிறது

கோலாலம்பூர், ஜூலை 22 – சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தது குறித்து  கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ சனுசி முகமது நோர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பான நிந்தனை  வழக்கு   ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது.

இந்த வழக்கு விசாரணை  நீதிபதி டத்தோ அஸ்லாம் ஜைனுடின் முன்னிலையில் நடைபெறும்.  சனுசியின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் அவாங் அர்மாடாஜெயா அவாங் மாமுட் இதனை  நேற்று பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.

கடந்தாண்டு ஜூலை 18ஆம் தேதி செலாயாங் செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  தமக்கெதிராக கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஜெனேரி சட்டமன்ற உறுப்பினருமான சனுசி மறுத்து விசாரணை கோரினார்.  இந்த வழக்கு  கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தனக்கெதிரான இரண்டு குற்றச்சாட்டுக்களையும் தள்ளுபடி செய்யக்கோரி  சனுசி சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் மனு செய்தார்.  ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கை இவ்வாண்டு  ஜூலை 23, 29 மற்றும் 30 ஆம் தேதிகளிலும், ஆகஸ்டு 5, 6, 9, 12, 13 மற்றும் 23 ஆம் தேதிகளிலும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்தாண்டு ஜூலை மாதம்  11ஆம் தேதி  இரவு 11.00 மணியளவில் கோம்பாக்,  சிம்பாங் 4, தாமான் செலாயாங் முத்தியாரா-கம்போங் பெண்டஹாராவில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது  சிலாங்கூர் மந்திரி புசாரின் நியமனம் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவியது குறித்து சனுசி நிந்தனையான  வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின்  4(1)(ஏ) பிரிவு மற்றும்  அதே சட்டத்தின் கீழ் தண்டிக்க வகை செய்யும்   4(1) பிரிவின் கீழ்  சனுசிக்கு எதிராக  நிந்தனைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால் கூடுதல் பட்சம் 5,000 வெள்ளி அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

– பெர்னாமா


Pengarang :