SELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் மரம் நடும், மறுசுழற்சி பொருள் சேகரிக்கும் இயக்கம்

ஷா ஆலம், ஜூலை 22  சமூகத்தின் மத்தியில்  சுற்றுச்சூழலை பாதுகாப்பது
மீதான  விழிப்புணர்வை வளர்ப்பதற்காக செந்தோசா தொகுதி தூய்மை மற்றும் பசுமை திட்டத்தை  கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த இயக்கத்தை ஒட்டி கிள்ளான், பட்டர்ஃபிளை பார்க்@புக்கிட் திங்கி  பொழுதுபோக்கு பூங்காவில் நேற்று  நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக  மெது நடை பயிற்சி, ஜூம்பா, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரித்தல் மற்றும் மரம் நடுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன  என்றார் அவர்.

மேலும், நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு அங்கமாக  பட்டாம்பூச்சி பூங்கா @ புக்கிட் திங்கி பொழுதுபோக்கு பூங்காவின்  திறப்பு விழா பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தலைமையில் நடைபெற்றது.

1.5 கிலோமீட்டர் நடைபாதை உள்ளிட்ட  பல வசதிகள்  கிள்ளான் அரச மாநகர் மன்றம் மூலம் ஏற்படுத்தப் பட்டதன் வழி  இந்த பொழுதுபோக்கு பூங்கா புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளது.

முன்பு,  மழை பெய்யும் போது இந்த நடைபாதையில் நீர் தேங்கியிருக்கும்.  மேம்படுத்தப்பட்ட பிறகு இந்த பூங்கா  பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு  மிகவும் வசதியாக இருக்கிறது என்று குணராஜ் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

“செந்தோசாவின் ஆரோக்கியமான செழிப்பான 60 நாள் சவால்” நிகழ்ச்சியின் நிறைவு விழாவும் இந்நிகழ்வுடன் இணைந்து  நடத்தப்பட்டதாக கூறிய அவர்,   இதில் முதல் வெற்றியாளருக்கு 1,000 வெள்ளியும்  இரண்டாவது வெற்றியாளருக்கு  700 வெள்ளியும் மற்றும் மூன்றாவது வெற்றியாளருக்கு 500 வெள்ளியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது என்றார்.

“செந்தோசாவின் ஆரோக்கியமான செழிப்பான 60 நாள் சவால்”  மூன்றாவது ஆண்டாக நடத்தி வருகிறோம். இது சுகாதாரப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வளர்ப்பதற்கான ஒரு உடல் எடை குறைப்புக்கான திட்டமாகும்.

இதில் 70 பங்கேற்பாளர்கள் பங்கு கொண்டனர். இதில்  சாம்பியனாக வாகை சூடியவர்  இரண்டு மாதங்களுக்குள் 15 கிலோகிராம்  உடல் எடையை குறைத்துள்ளார் என்றார் அவர்.


Pengarang :