SELANGOR

கெடா மந்திரி புசாருக்கு எதிரான நிந்தனை வழக்கு செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஷா ஆலம், ஜூலை 22 – சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ சனுசி முகமது நோருக்கு எதிராக தொடுக்கப்பட்ட  நிந்தனை  வழக்கு   வரும் செப்டம்பர் மாதம்  27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திற்கு புதிய மனுவைத் தாங்கள் கடந்த வாரம் அனுப்பியுள்ளதாக முகமது சனுசியின் (வயது 50) வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிபதி டத்தோ அஸ்லாம் ஜைனுடின் விசாரணையை வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

தாங்கள் தாக்கல் செய்த புதிய மனுவை பரிசீலிப்பதற்கும் இந்த வழக்கை ஆராய்வதற்கும் சட்டத் துறைத் தலைவருக்கு கால அவகாசம் தேவைப்படும் எனத் தாங்கள் கருதுவதாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர் அவாங் அர்மாடாஜெயா அவாங் மாமுட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆகவே, இந்த மனு மீதான முழுமையான விவரங்கள் கிடைப்பதற்கு ஏதுவாக இவ்வழக்கை இரண்டு மாத காலத்திற்கு ஒத்தி வைக்க நான் பரிந்துரைக்கிறேன். நீதிமன்றம் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் இரண்டு மாத காலத்தில் வழக்கிற்கான தேதியை நிர்ணயிப்பதற்கு நான் விண்ணப்பிக்கிறேன் என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிற்கான நிர்வாக விசாரணையை வரும் செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு தேதி நிர்ணயிக்கப்படும் என்றார்.

கடந்தாண்டு ஜூலை 18ஆம் தேதி செலாயாங் செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  தமக்கெதிராக கொண்டுவரப்பட்ட இரண்டு நிந்தனைக் குற்றச்சாட்டுகளை  ஜெனேரி சட்டமன்ற உறுப்பினருமான சனுசி மறுத்து விசாரணை கோரினார்.  இந்த வழக்கு  கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தனக்கெதிரான இரண்டு குற்றச்சாட்டுக்களையும் தள்ளுபடி செய்யக்கோரி   சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் சனுசி செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

கடந்தாண்டு ஜூலை மாதம்  11ஆம் தேதி  இரவு 11.00 மணியளவில் கோம்பாக்,  சிம்பாங் 4, தாமான் செலாயாங் முத்தியாரா-கம்போங் பெண்டஹாராவில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது  சிலாங்கூர் மந்திரி புசாரின் நியமனம் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவியது குறித்து சனுசி நிந்தனையான  வார்த்தைகளை பேசியதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின்  4(1)(ஏ) பிரிவு மற்றும்  அதே சட்டத்தின் கீழ் தண்டிக்க வகை செய்யும்   4(1) பிரிவின் கீழ்  சனுசிக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல்பட்சம் 5,000 வெள்ளி அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.


Pengarang :