NATIONAL

மேலவைத் தலைவராக அவாங் பிமீ நியமனம்

கோலாலம்பூர், ஜூலை 22- சரவா மாநிலத்தின் நங்கா தொகுதி முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் பிமீ அவாங் அலி பாஷா
மேலவையின் 21வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 10ஆம் தேதி காலமான மேலவைத் தலைவர் டத்தோ
முதாங் தகாலுக்கு பதிலாக அவாங் பிமீ நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் மூன்றாம்
தவணைக்கான இரண்டாவது கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் அவாங் பிமீயின் பெயரை முன்மொழிந்தார். மேலவைத்
தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்ட ஒரே வேட்பாளர் அவாங் என்பது
குறிப்பிடத்தக்கது.

சரவா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவாங் சரவா, மாநிலத்தின்
போர்னியோ உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 1984ஆம் ஆண்டு முதல்
பணியாற்றியுள்ளார். கூட்டரசு நீதிமன்றம் உள்பட பல்வேறு
நிலைகளிலான வழக்குகளை இவர் நடத்தியுள்ளார்.

சரவா மாநில சட்டமன்ற உறுப்பினராக மூன்று தவணைகள் பொறுப்பு
வகித்த இவர், கூச்சிங் துறைமுக வாரியத்தின் தலைவராக கடந்த 1998 ஆம்
ஆண்டு முதல் பணியாற்றியுள்ளார்.

நிலைக்குழுவின் 2(1)ஆம் பிரிவுக்கு ஏற்ப பரந்த அனுபவத்தைக்
கொண்டுள்ள அவாங், இப்பதவிக்கு நியமிக்கப்படும் பட்சத்தில் செவ்வனை
சேவையாற்ற ஒப்புக் கொண்டுள்ளார் என அன்வார் குறிப்பிட்டார்.

பிரதமர் துறை அமைச்சர்) சட்டம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்)
டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் பிரதமரின் இந்த பரிந்துரையை
வழிமொழிந்தார்.

மாட்சிமை தங்கிய பேரரசரின் ஒப்புதலின் பேரில் செனட்டராக அவாங்
கடந்த ஜூலை 15ஆம் தேதி மேலவைத் துணை சபாநாயகர் டத்தோ நுர்
ஜஸ்லான் முகமது முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்
கொண்டார்.


Pengarang :