SELANGOR

‘பிளாட்ஸ்‘ வழங்கும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்திய வணிகர்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூலை 22- ‘பிளாட்ஸ்‘ எனப்படும் பிளாட்பார்ம் சிலாங்கூர் அமைப்பின் வாயிலாக வழங்கப்படும் வர்த்தக விரிவாக்க வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் படி இந்திய தொழில் முனைவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மாநில அரசினால் உருவாக்கப்பட்ட இந்த பிளாட்ஸ் அமைப்பு வர்த்தகத்தை இலக்கவியல் மயமாக்குவது உள்பட பல்வேறு அனுகூலங்களை தொழில் முனைவோருக்கு வழங்குவதாக பிளாட்பார்ம் சிலாங்கூர் நிர்வாகி கென்னத் சேம் சாமிநாதன் கூறினார்.

சிலாங்கூரில் உள்ள தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கில் பிளாட்ஸ் எனப்படும இந்த இணைய வர்த்தக தளத்தை உருவாக்கியுள்ளது. சேவை, உற்பத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சேர்ந்த வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை இலவசமாக சந்தைப்படுத்துவதற்கு இந்த தளம் உதவுகிறது. இது தவிர இந்த திட்டத்தில் பங்கேற்போர் மேலும் பல அனுகூலங்களை பெறுவதற்குரிய வாய்ப்பும் உள்ளது என அவர் சொன்னார்.

இந்த திட்டத்தில் இணையும் தொழில்முனைவோர் மைக்ரோ கிரெடிட் எனப்படும் வட்டியில்லா சிறு தொழில் கடன் உதவி பெற முடியும். மேலும், உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக கண்காட்சிகளிலும், தீபாவளிச் சந்தை போன்ற பெருநாள் கால விற்பனை விழாக்களிலும் பங்கேற்பதற்கு இத்திட்ட பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, தங்கள் சொந்த தயாரிப்புகளை அல்லது விற்பனைப் பொருட்களை இணையம் வாயிலாக விளம்பரப்படுத்து வதற்கு ஏற்ற வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுப்பதற்கும் பயிற்சி வழங்கப்படும்.

அதே சமயம், வர்த்தகத்தை சந்தைப்படுத்துவது மற்றும் டிக்டாக் வழி அவற்றை  விளம்பரப்படுத்துவது தொடர்பான நுணுக்கங்களும் இந்த பிளாட்ஸ் திட்டத்தின் வாயிலாக இலவசமாக வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

மாநில அரசு இலவசமாக வழங்கும் இந்த வர்த்தக ஊக்குவிப்பு வாய்ப்புகளை இந்திய சமூகம் குறிப்பாக தொழில் முனைவோர் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்  கொண்டார்.

இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் வர்த்தக உரிமம் மற்றும் எஸ்.எஸ்.எம். எனப்படும் மலேசிய நிறுவனப் பதிவைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், சிலாங்கூரில் பிறந்தவர்களாக அல்லது ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். வர்த்தக நடவடிக்கைகளைச் சிலாங்கூரில் மேற்கொள்பவர்களாக இருத்தல் அவசியம்.
மேல் விபரங்களுக்கு https://platselangor.com/  என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது 016-9512458 என்ற வாட்ஸ் ஆப் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பிளாட்ஸ் என்பது சிலாங்கூரிலுள்ள வர்த்தகர்களின் பொருளாதார நடவடிக்கைகளை உயர்த்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கவியல் ஊக்குவிப்புத் தளம் மற்றும் வழிகாட்டியாகும்.


Pengarang :