NATIONAL

நுர் ஃபாரா கார்தினியியை படுகொலை செய்ததாகப் போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், ஜூலை 26 – நுர் ஃபாரா அப்துல்லா என்ற இளம் பெண்ணைப் படுகொலை செய்ததாக போலீஸ்காரர் ஒருவருக்கு எதிராக கோல குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ் சாட்டப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் 10 மற்றும் 15 ஆம் தேதிக்கு இடையே உலு பெர்ணம், கம்போங் ஸ்ரீ கிளேடாங்கிலுள்ள செம்பனை தோட்டம் ஒன்றில் சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான நுர் ஃபாரா கார்தினியை படுகொலை செய்ததாக லான்ஸ் கார்ப்ரல் முகமது அலிஃப் மோன்ஜானி (வயது 26) என்ற அந்த போலீஸ்காரருக்கு எதிராக குற்றச்சாட்டு  கொண்டு வரப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது 12 க்கும் குறையாத பிரம்படிகள் வழங்க வகை  செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த வழக்கு இன்று கோல குபு பாரு நீதிமன்றத்தில் நீதிபதி நுருள் மர்டிஹா முகமது ரெட்சா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

முன்னதாக, காலை 9.04 மணியளவில் முகமது அலிஃப் காவல்துறையின் நான்கு சக்கர இயக்க வாகனத்தில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார். கருப்பு நிற டி சட்டை மற்றும் கருப்பு நிற கால் சட்டையுடன் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த ஜூலை 10ஆம் தேதி வாடகைக் காரை வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கச் சென்ற ஃபாரா (வயது 25) அதன் பின்னர் காணாமல் போனார். அவரது உடல் கடந்த ஜூலை 15ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் உலு சிலாங்கூரிலுள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவ பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதுடைய போலீஸ்காரர் ஒருவரை தாங்கள் தடுத்து வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Pengarang :