NATIONAL

மலேசிய வர்த்தக, தொழிலியல் சபைக்கு வெ.10 லட்சம் நன்கொடை- பிரதமர் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26 – மலேசிய தேசிய வர்த்தக மற்றும் தொழிலியல் சபைக்கு (என்.சி.சி.ஐ.எம்.) பத்து லட்சம் வெள்ளியை நன்கொடையாக அளிப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

உள்நாட்டு மற்றும் அனைத்துலக முதலீடுகளை ஈர்க்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அந்த அமைப்பு வழங்கி வரும் ஆதரவை அங்கீகரிக்கும் வகையில் இந்த நன்கொடை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கக் கொள்கைகளை அறிந்து கொள்வதிலும் மக்களுக்கு ஆக்கத் திறனளிப்பதிலும் வழங்கி வரும் ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் மேற்கொள்ளப்படும் அந்நிய நாட்டுப் பயணங்களின் போது வழங்கி வரும் ஆதரவுக்கு தாம் வர்த்தக சபைக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் சொன்னார்.

மலேசியா முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் (மிடா) மற்றும் இதர அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள்  மலேசிய வர்த்தக மற்றும் தொழிலியல் சபையின் முழு ஒத்துழைப்பின்றி வெற்றி பெறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு நடைபெற்ற மலேசிய வர்த்தக மற்றும் தொழிலியல் சபையின் 62 ஆம் ஆண்டு நிறைவு விழா விருந்து நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கான எரிசக்தி மாற்றம், கல்வி, இலக்கவியல் உருமாற்றம், ஆளுமை மேம்பாடு தொடர்பில் வர்த்தக மற்றும் தொழிலியல் சபை முன்வைத்துள்ள புதிய பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அன்வார் கூறினார்.

எதிர்வரும் 2050 ஆண்டுக்குள் சுழியம் கார்பன் வெளியேற்றத் திட்ட இலக்கை அடைவதற்கு ஏதுவாக தேசிய சுற்றுச்சூழல், சமூகவியல் மற்றும் ஆளுகை நிதியை உருவாக்குவது, தொழில் கல்வித் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி (திவேட்) பயிற்சி அங்கீகார நிதி உருவாக்கம் ஆகியவையும் அந்த பரிந்துரைகளில் அடங்கும்.


Pengarang :