NATIONAL

காஸா விவகாரத்தில் நான் மெளனம் காக்கமாட்டேன்- கமலா ஹாரிஸ் சூளுரை

வாஷிங்டன், ஜூலை 26 –  வெள்ளை   மாளிகையில் நேற்று   நடைபெற்றச்  சந்திப்பின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காஸா பகுதியின் நிலைமை குறித்து தாம் ஆழ்ந்த கவலை தெரிவித்ததாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அதிக அளவு உணவுப் பாதுகாப்பின்மை எதிர்கொள்வதோடு மேலும் ஐந்து லட்சம் பேர்  கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையின் பேரழிவு நிலையை எதிர் கொள்வதால் அங்கு நிலவும்  மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து எனது ஆழ்ந்த  கவலையை நான் தெளிவு படுத்தினேன்  என்று  நெதான்யாஹூவுடனான தனிப்பிட்ட சந்திப்புக்குப் பின் கமலா ஹாரிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்க காங்கிரஸின் கூட்டு கலந்துரையாடல் அமர்வில் நெதன்யாகு உரையாற்றிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது.  நகர்ப்புற போர் வரலாற்றில் போரிட்டவர்கள் மற்றும் போரிடாதவர்கள் மத்தியில்  மிகக் குறைந்த   விகிதாசார அளவில் உயிரிழப்புகளைப் பதிவு செய்த போர்களில் ஒன்றாக  காஸா போர்  உள்ளது என்று நெதான்யாஹூ அப்போது கூறியிருந்தார்.

கடந்த ஒன்பது மாதங்களில் காஸாவில் நிகழ்ந்தது ஒரு “பேரழிவு” என்று ஹாரிஸ் வர்ணித்தார்.

இறந்த  மற்றும் பரிதவிக்கும் குழந்தைகள், பசியுடன்  சில நேரங்களில் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது முறையாக  இடம்பெயர்ந்து ஓடும் மக்களின்  படங்களை நாம் காண்கிறோம்.

இந்த துயரங்களை நாம் வெறுமனே  நாம் பார்த்துக் கொண்டிருக்க  முடியாது. துன்பங்களை உணராத  உணர்ச்சி அற்றவர்களாக மாற நம்மை  அனுமதிக்க முடியாது. மேலும் நான்  மெளனம் காக்கவும் மாட்டேன் என்று கமலா கூறினார்.

காஸா மீதான தனது   கொள்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவரது இந்த பேச்சு பிரதிபலிக்கிறது.

முற்றுகையிடப்பட்ட பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்தும் படியும் அவர்  நெதன்யாகுவை  வலியுறுத்தினார்.

எங்கள் அதிபர் ஜோ பைடனின் தலைமைக்கு நன்றி. போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் தொடர்பான  ஒப்பந்தம் தயாராக உள்ளது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான தருணம் இது என்று நான் பிரதமர் நெதன்யாகுவிடம் கூறினேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :