குவாந்தான், ஜூலை 26 – கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்த வேளையில் அவர்களின் இரு பிள்ளைகள் காயங்களுக்குள்ளாயினர்.

இந்த துயரச் சம்பவம் லிப்பில் பத்து 3, லிங்காரான்  தெங்கா ரவுப் சாலையின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் நேற்றிவு 10.20 மணியளவில் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் பள்ளியில் பாதுகாவலராக பணிபுரியும் முகமது அனாசார் கமாருஸமான் (வயது 34) மற்றும் காலணி கடை ஒன்றில் உதவியாளராகப் பணிபுரியும் அவரின் மனைவி ஜலினா அலி (வயது 40) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ரவுப் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் ஷாரில் அப்துல் ரஹ்மான் கூறினார்.

தங்கள் பெற்றோர்களுடன் புரோட்டேன் வீரா காரில் பயணித்த அத்தம்பதியரின் இரு பிள்ளைகளும் நான்கு சக்கர வாகனத்தின் ஓட்டுநரும் இவ்விபத்தில் காயங்களுக்குள்ளாகி ரவுப் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக அவர் சொன்னார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் பயணித்த அந்த கார் பச்சை விளக்கில் பயணிக்க முற்பட்ட போது லிப்பிசிலிருந்து ரவூப் நோக்கி வந்த நான்கு சக்கர இயக்க வாகனம் சிவப்பு விளக்கில் நிற்காமல் அக்காரை மோதியது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

நான்கு சக்கர இயக்க வாகனத்தின் ஓட்டுநரின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்பது கண்டறியப்பட்டதாக கூறிய அவர், 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் இவ்விபத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.