NATIONAL

மாசுபாடு காரணமாக ஏற்பட்ட நீர் விநியோகத் தடையை விசாரிக்க சிறப்புக் குழு- ஸ்பான் அமைக்கிறது

புத்ராஜெயா, ஜூலை 26 – நீர் மாசுபாடு காரணமாக சிலாங்கூரில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடையை விசாரிக்க தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்) சிறப்புக் குழுவை அமைக்க இருக்கிறது.

இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக இக்குழு தகவல்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டும் அதேவேளையில் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யும் என்று ஸ்பான் இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்த ஆணையம் கூறியது.

நிலையான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கு ஏதுவாக அனைத்துத் தரப்பினரும் நடைமுறைப் படுத்தக்கூடிய சிறந்த செயல்திட்டத்தை அக்குழு பரிந்துரைக்கும்.

இந்த தரவு சேகரிப்பில் சுற்றுச்சூழல் துறை, மூல நீர் ஆதார மேலாண்மை அமைப்புகள், ஊராட்சி மன்றங்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த நீர் சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட தரப்பினர் ஈடுபடுவர் என ஸ்பான் கூறியது.

அண்மையில் சுங்கை செம்பா மற்றும் சுங்கை குண்டாங்கில் நீரில் துர்நாற்றம் உணரப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி தொடங்கி சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

இந்த அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை காரணமாக சுமார் 10 லட்சம் பயனீட்டாளர்கள்  பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு காரணமான தரப்பினருக்கு எதிராக கடந்த புதன் கிழமை விசாரணை அறிக்கை திறக்கப்பட்டதாக அந்த ஆணையம் தெரிவித்தது.

2006ஆம் ஆண்டு நீர் சேவைத் தொழில்துறைச் சட்டத்தின் 121(1)(சி) பிரிவின் கீழ் இந்த விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்க படுவோருக்கு பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 500,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும்.


Pengarang :