NATIONAL

விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிர் தப்பினர்

கோலாலம்பூர், ஜூலை 27: நேற்று பிற்பகல் சிலாங்கூர் பண்டார் பூச்சோங் ஜெயாவில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிர் தப்பினர் மற்றும் பெண் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக மதியம் 2 மணிக்கு தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாகவும், பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒன்பது அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயற்பாட்டு பிரிவு உதவி இயக்குனர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

“அக்குழு விடுதி 100 சதவீதம் எரிந்ததைக் கண்டறிந்தது. மேலும், அங்கு 36 வயது பெண் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார்.

“பிறகு, அக்குழு தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டது. மேலும் கட்டிடத்தின் கீழ் இரண்டு மெர்சிடிஸ் வகை கார்கள் மற்றும் ஒரு டொயோட்டா ப்ரியஸ் ஆகியவை ஐந்து சதவீத சேதம் அடைந்திருந்தன,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் 16 முதல் 65 வயதுக்குட்பட்ட ஒன்பது ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் அடங்குவர். மேல் சிகிச்சைக்காக மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர் மலேசியா சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ அதிகாரியிடம் (கேகேஎம்) ஒப்படைக்கப் பட்டதாகவும் அஹ்மட் முக்லிஸ் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றார்.

– பெர்னாமா


Pengarang :