NATIONAL

கிள்ளான் பள்ளத்தாக்கில் 25 சட்டவிரோத அந்நிய தொழிலாளர்கள்  கைது

கோலாலம்பூர் ஜூலை 27: நேற்று கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள 26 வளாகங்களில் நடத்தப்பட்ட பல சோதனை நடவடிக்கையில் மொத்தம் 25 சட்டவிரோத  அந்நிய தொழிலாளர்கள், முறையான அடையாள ஆவணங்கள் இல்லாத காரணத்தினால்  கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் சீனாவைச் சேர்ந்த 18 ஆண்களும் ஏழு பெண்களும் அடங்குவர் என்று சிலாங்கூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் கைர்ருல் அமினஸ் கமாருடின் தெரிவித்தார்.

“சட்டவிரோதக் குடியேறிகள் அனைவரும் மேல் விசாரணைக்காக செமினி குடிநுழைவு டிப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வியாபாரிகள், மளிகை கடை தொழிலாளர்கள், உணவக தொழிலாளர்கள், முடிதிருத்தும் பணியாளர்கள், கேளிக்கை மையங்களின் பணியாளர்கள் மற்றும் கார் பட்டறைகளில் வேலை செய்பவர்கள் ஆவர்” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். .

செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது அனுமதி இல்லாமல் மலேசியாவில் நுழைந்து தங்கியதற்காகக் குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படும் என்றார்.

– பெர்னாமா


Pengarang :