NATIONAL

சொகுசுக் கப்பல்களுக்கான தளமாக மலேசியாவை மாற்ற கப்பல் தளங்கள் விரிவாக்கப்படும்

புத்ராஜெயா, ஜூலை 30 – மலேசியாவை ‘ஹோம்போர்ட்’ அல்லது உல்லாசக் கப்பல்களுக்கான தளமாக மாற்றும் முயற்சியாக தற்போதுள்ள துறைமுகங்களை விரிவாக்கும் மற்றும் தரம் உயர்த்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில்  போர்ட் கிள்ளான் குரூஸ் டெர்மினல் முனையத்தில் அதிக உல்லாசக் கப்பல்களை நிறுத்துவதற்கு ஏதுவாக  இட வசதியை  அதிகரிப்பது மற்றும் பினாங்கில் உள்ள ஸ்வெட்டன்ஹாம் பையர் குரூஸ் டெர்மினலைச் சுற்றியுள்ள பகுதியை அழகுபடுத்துவது உட்பட பல மேம்பாடுட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

லங்காவி, மலாக்கா, குவாந்தன், கோத்தா கினாபாலு மற்றும் கூச்சிங் போன்ற துறைமுகங்கள்  தற்போது உல்லாசக் கப்பல்களுக்கான உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் அங்கு  தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில்  சொகுசுக்  கப்பல்களை நிறுத்தும்  திறன் கொண்டவையாக அவை விளங்கும்  என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் சுற்றுலா கப்பல் துறை கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்குப் பிறகு வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. கடந்தாண்டு  15 லட்சம் சுற்றுப் பயணிகளுடன்   1,055  சொகுசுக் கப்பல்கள் மலேசியா வந்தன. கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது  85 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.

நேற்று இங்கு மலேசியக் சொகுசுக்  கப்பல் மன்றத்தின் (எம்சிசி) கூட்டத்தில் கலந்து கொண்டப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில்  சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்கும் கலந்து கொண்டார்.

மலேசியாவை பிரசித்தி பெற்ற தளமாக மாற்றுவதற்கு ஏதுவாக மேற்கொள்ளப்படும் அதிக பயணக் கப்பல்களை ஈர்க்கும் முயற்சிகள் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, சுற்றுலா கப்பல் சேவையை மேற்கொள்வதற்குரிய  வாய்ப்புள்ள மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட  பகுதிகளை மேம்படுத்துவதற்கு  முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

மலேசியாவில் உல்லாசக் கப்பல் துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சுடன் இணைந்து போக்குவரத்து அமைச்சு ஒரு தொழில்நுட்பக் குழு நிறுவ உள்ளது எனவும் லோக் குறிப்பிட்டார்.


Pengarang :