NATIONAL

கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினராக அருள்நேசன் ஜெயபாலன் நியமனம்

கிள்ளான், ஜூலை 30 – கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி.கே.)
2024-2025ஆம் தவணைக்கான புதிய உறுப்பினராக அருள்நேசன் ஜெயபாலன்
நியமனம் பெற்றுள்ளார்.

மாநகர் மன்ற உறுப்பினர்களாக நேற்று பதவியேற்ற ஒன்பது
உறுப்பினர்களில் ஜெயபாலனும் ஒருவராவார். அனைத்து உறுப்பினர்களும்
கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் டத்தின் படுகா
நோராய்னி ரோஸ்லான் முன்னிலையில் நேற்று பதவி உறுதி மொழி
எடுத்துக் கொண்டனர்.

பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்றத் தொகுதியின் இந்திய சமூகத்
தலைவராக (கே.கே.ஐ.) பதவி வகித்து வரும் அருள் நேசன் ஜாலான்
ஹசான் ஜசெக கிளையின் தலைவராகவும் கடந்த எட்டு ஆண்டுகளாக
இருந்து வருகிறார்.

தம்மீது நம்பிக்கை வைத்து அரச மாநகர் மன்ற உறுப்பினராக நியமனம்
செய்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு மற்றும் ஜசெக
தலைமைத்துவதற்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அருள்நேசன்
கூறினார்.

கிள்ளான் மாநகர் மன்றத்தின் வளர்ச்சியில் குறிப்பாக தாம்
பொறுப்பேற்றள்ள கோலக்கிள்ளானை உட்படுத்திய மண்டலத்தில்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக
அவர் தெரிவித்தார்.

அருள்நேசனின் நியமனத்துடன் சேர்த்து கிள்ளான் அரச மாநகர் மன்றத்தில்
இடம் பெற்றுள்ள இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக
உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி  2 ஆம் தேதி நடைபெற்ற முதல் நியமன நிகழ்வில் நான்கு
இந்தியர்கள் உள்பட 15 பேர் 2024/2025 ஆம் தவணைக்கான புதிய கவுன்சிலர்களாக
நியமிக்கப்பட்டனர். யுகராஜா பழனிசாமி (ஜசெக), குமணன் பெருமாள் (ஜசெக),
தங்கராஜன் த/பெ அப்துல்  காசிம் (பி.கே.ஆர்.) ரோய் ஞானேஸ்வரன் (பி.கே.ஆர்.)
ஆகியோரே அந்த நான்கு இந்தியப் பிரதிநிதிகளாவர்.


Pengarang :