NATIONAL

நெதான்யாஹூவின் புதிய நிபந்தனை காஸாவில் போர் நிறுத்தத்தை தாமதப்படுத்தும்- ஹமாஸ் கூறுகிறது

காஸா, ஜூலை 30 – காஸா தீபகற்பத்தில் போர் நிறுத்தத்தை
அமல்படுத்தும் முயற்சிகளுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்
நெதான்யாஹூ தடையாக உள்ளதாக ஹமாஸ் நேற்று குற்றஞ்சாட்டியது.

புதிய நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம்
போர் நிறுத்த உடன்பாட்டை தாமதப்படுத்துவதற்கான வியூகத்தை
நெதான்யாஹூ கையில் எடுத்துள்ளார் என்று அந்த அமைப்பு வெளியிட்ட
அறிக்கை ஒன்று கூறியது.

போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொள்வது
தொடர்பில் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடைபெற்ற கூட்டத்தில்
இஸ்ரேலின் புதிய நிபந்தனைகள் அடங்கிய ஆவணங்கள் தொடர்பான
தகவல் மத்தியஸ்தர்கள் மூலம் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக அது
தெரிவித்தது.

இதற்கு முன்னர் மத்தியஸ்தர்கள் முன்வைத்த அம்சங்களை மீட்டுக்
கொள்வதும் நெதான்யாஹூவின் புதிய நிபந்தனைகளில் அடங்கும் எனக்
கூறிய ஹமாஸ், எனினும், அந்த நிபந்தனைகள் தொடர்பான மேல்
விபரங்களை வெளியிடவில்லை.

காஸாவில் போர் நிறுத்தத்தை அமல் செய்வது, பிணைக்கைதிகளை
பரிமாறிக் கொள்வது தொடர்பில் விவாதிப்பதற்காக இஸ்ரேல் நாட்டின்
மெசாட் அமைப்பின் தலைவர் டேவிட் பெர்னியா, சிஐஏ இயக்குநர்
வில்லியம் பெர்ன்ஸ், கட்டார் பிரதமர் ஷேக் முகமது அப்துல்ரஹ்மான்
அல் தானி, எகிப்தின் உளவுப் பிரிவு தலைவர் அபாஸ் கமால் ஆகியோர்
கடந்த வாரம் சந்திப்பு நடத்தினர்.

இவ்விவகாரத்தில் மத்தியஸ்தர்களாக விளங்கும் அமெரிக்கா, கட்டார்
மற்றும் எகிப்து மூலம் இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் நடத்தி வரும்
மறைமுகப் பேச்சுகளில் போர் நிறுத்தம் தொடர்பில் எந்த முன்னேற்றமும்
ஏற்படவில்லை.


Pengarang :