SELANGOR

பூச்சோங் ஜெயா சாலையை தரம் உயர்த்தும் பணி அடுத்த மாதம் பூர்த்தியாகும்

ஷா ஆலம், ஜூலை 31- இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட
பூச்சோங் ஜெயா சாலையை தரம் உயர்த்தும் பணி எதிர்வரும் ஆகஸ்டு மாதம்
முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 747,000 வெள்ளி செலவினலான இந்த சாலை சீரமைப்புப் பணி
தற்போது 48 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாகக் கின்றாரா சட்டமன்ற
உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

அந்த சாலையில் சுமார் 700 மீட்டர் பகுதியை விரிவுபடுத்துவது மற்றும்
தரம் உயர்த்துவதை இந்த திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர்
சொன்னார்.

ஜாலான் பண்டார் பூச்சோங்கில் குறிப்பாக காலை வேளையில் ஏற்படும்
கடுமையான போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காணும்
நோக்கில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஜாலான் பண்டார் பூச்சோங் சாலை தவிர்த்து, ஜாலான் பிப்பிட், புக்கிட்
தண்டாங் பகுதி, பண்டார் பூச்சோங் ஜெயா பகுதிக்குச் செல்லும் சாலை
மற்றும் எல்டிபி. நெடுஞ்சாலைக்குச் செல்லும் சாலை ஆகியவையும்
போக்குவரத்து நெரிசலை எதிர்நோக்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.

சாலையை தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதிக்கு
சுபாங் ஜெயா டத்தோ பண்டார் அமிருள் அஜிசான் அப்துல் ரஹிமுடன்
நேற்று வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
கூறினார்.

இதனிடையே, இந்த சாலை சீரமைப்புப் பணி திட்டமிட்ட காலத்திற்குள்
முற்றுப் பெறும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அமிருள் சொன்னார்.

இந்த மேம்பாட்டுப் பணிகள் திட்டமிட்டப்படி தயாராகும் என நாங்கள்
எதிர்பார்க்கிறோம். அசல் அட்டவணைப் படி அத்திட்டம் இம்மாதமே முற்றுப் பெற்றிருக்க வேண்டும். எனினும், ஒரு மாதத்திற்கு அப்பணியை நீட்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :