NATIONAL

அந்நிய நாட்டினருக்கு வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடும் நடவடிக்கை- ஜே.பி.ஜே. எச்சரிக்கை

புத்ராஜெயா, ஜூலை 31- பல முறை குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்ட
போதிலும் லைசென்ஸ் இல்லாத அந்நிய நாட்டினருக்கு வாகனங்களை
வாடகைக்கு விடும் போக்கு உள்நாட்டு வாகன உரிமையாளர்கள் மத்தியில்
தொடர்ந்து காணப்படுகிறது.

இத்தகைய உள்நாட்டு வாகன உரிமையாளர்களை தாங்கள் அழைத்து இது
போன்றச் செயல்களை மீண்டும் புரிவதில்லை என்ற உறுதி மொழியைப்
பெறவுள்ளதாக சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜே.பி.ஜே.) தலைமை
இயக்குநர் ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.

சம்பந்தப்பட்ட அனைத்து வாகனமோட்டிகளையும் சாலை போக்குவரத்து
இலாகாவும் புத்ராஜெயா கழகமும் (பி.பி.ஜே.) அழைத்து அந்நிய
நாட்டினருக்கு வாகனங்களை வாடகைக்கு விட மாட்டோம் என்று உறுதி
மொழியைப் பெறவிருக்கிறோம் என்ற அவர் சொன்னார்.

இந்த உறுதிமொழி நிகழ்வுக்கான ஏற்பாட்டை புத்ராஜெயா கழகம் செய்யும்.
சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஆலோசக சேவையை
வழங்கும் அதிகாரிகளை நாங்கள் ஏற்பாடு செய்வோம் என்றார் அவர்.

அந்நிய நாட்டினருக்கு வாகனங்களை வாடகைக்கு விடும் சம்பவங்கள்
நீண்ட காலமாக நிகழ்ந்து வருகிறது. ஒரு சிலர் குற்றப்பதிவுகள் கிடைத்த
நிலையிலும் இத்தகையச் செயலைத் தொடர்ந்து புரிந்து வருகின்றனர்
என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு புத்ரா ஜெயா கழகத்துடன் இணைந்து அந்நிய
வாகனமோட்டிகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த சோதனை
நடவடிக்கையை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைக்
கூறினார்.

இச்சோதனையில் 90 வாகனங்கள் சோதனையிடப்பட்ட வேளையில்
அவற்றில் ஒரு கார் மற்றும் 72 மோட்ட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் போது மொத்தம் 228 குற்ற அறிக்கைகள்
வெளியிடப்பட்டன. அவற்றில் 117 அறிக்கைகள் அந்நிய நாட்டினருக்கும்
111 அறிக்கைகள் வாகன உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டன என்றார்
அவர்.


Pengarang :