ANTARABANGSA

கேரளா நிலச்சரிவில் 100 பேர் வரை பலி – காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்

புதுடில்லி, ஜூலை 31- தென்னிந்திய மாநிலமான கேரளாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில்  மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக  கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து   அழகிய மலைப்பிரதேச  மாவட்டமான வயநாடு பேரழிவின் அடையாளமாக காட்சியளிக்கிறது.

நிலச்சரிவால்  பாதிக்கப்பட்ட இடங்களில் முண்டக்கை, சூரல்மாலா, அட்டமாலா மற்றும் நூல்புழா ஆகிய கிராமங்களும் அடங்கும் என  உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து இதுவரை 93 பேரின்  உடல்கள் மீட்கப்பட்டுள்ள வேளையில் மேலும் 128 பேர் காயமடைந்துள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

சாலியாறு ஆற்றில் 16 உடல்களும்  உடல் பாகங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த பேரிடரைத் தொடர்ந்து  கேரள மாநில அரசு 2 நாள் துக்கம் அனுசரிக்கிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு முறையான  சிகிச்சைக்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் வயநாட்டில் 45 நிவாரண முகாம்கள் உள்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 118 முகாம்களையும் திறந்துள்ளோம். அவற்றில் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று விஜயன்  குறிப்பிட்டார்.

மேலும் கனமழை பெய்யும் என்ற முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில்  தென் மாநிலத்தின் பல மாவட்டங்கள் பயணம் மற்றும் சுற்றுலா மேற்கொள்ளக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இந்திய ராணுவம் மற்றும் பேரிடர் முகமை வீரர்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சரின் வேண்டுகோளின் பேரில்  பெல்ஜிய மாலினோயிஸ், லாப்ரடோர்ஸ் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ் உள்ளிட்ட இராணுவத்தின்  உயர்நிலை மோப்பநாய் பிரிவிலிருந்து பயிற்சி பெற்ற நாய்கள்  பேரில் நிலச்சரிவு நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவும் கேரளாவுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவ முன்வந்துள்ளன.

பேரழிவை அடுத்து கேரளாவிற்கு எல்லா உதவிகளையும் வழங்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது.


Pengarang :