NATIONAL

உலகின் மிகப்பெரிய பேரழிவு முகாமாக காஸா மாறி வருகிறது- எர்டோகன் வேதனை

இஸ்தான்புல், ஜூலை 31 – காஸா பகுதி “உலகின் மிகப்பெரிய பேரழிவு  முகாமாக” மாறி வருவதோடு  “ஹிட்லரை மிஞ்சும்” ஒரு அட்டூழியத்தையும் இஸ்ரேல் புரிந்துள்ளது என்று துருக்கிய அதிபர் ரிகேப் தாயிப் எர்டோகன் கூறினார்.

உலகில்  பாதுகாப்பை உறுதி செய்வதை கடமையாகக் கொண்ட மேற்கத்திய தலைவர்களும் அமைப்புகளும் கிட்டத்தட்ட 300 நாட்களாக இந்த கொடூரத்தை வெகு தொலைவிலிருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தலைநகர் அங்காராவில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளால்  முழு பிராந்தியத்திற்கும் ஆபத்து விளைவிப்பதைக் காண இன்னும் எத்தனை சிறார்கள் இறக்க வேண்டும்?  இது தொடரக்கூடிய பாதையல்ல! என்று அவர் மேலும் கூறினார்.

“கொடூரம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தை  இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

பயங்கரவாத அமைப்பாக செயல்பட்டு ஆக்கிரமிப்பு, படுகொலைகள் மற்றும் நில அபகரிப்பு மூலம் தனது பாதுகாப்பை தேடும் ஒரே நாடு இஸ்ரேல் என்றும் அவர் வர்ணித்தார்.

சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாத  இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனம் மற்றும் லெபனானுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும்  முழு உலகிற்கும்  தற்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று எர்டோகன் தெரிவித்தார்.


Pengarang :