SELANGOR

தொடக்கப் பள்ளிகளில் பிஸாஸ்டிக் பயன்பாடு இல்லா இயக்கம் அடுத்தாண்டு  தொடங்கப்படும்

ஷா ஆலம், ஆக 1-  மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களிடையே பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பை பயன்பாடு இல்லா விழிப்புணர்வு பிரச்சாரம் அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள்  குறித்து சிறார்களுக்கு  போதிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த இயக்கம்  மாநில சுற்றுச்சூழல் துறைக்கான  ஆட்சிக்குழுவுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாக பயனீட்டாளர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  தெரிவித்தார்.

இந்த பிரச்சாரம் இயக்கம்  கடந்த சில ஆண்டுகளாக மளிகை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள்  உள்ளிட்ட இடங்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி மக்களுக்குக் போதிக்க விரும்புகிறோம். மேலும், நிர்ணயித்த இலக்கை அடையும் வகையில் இத்திட்டத்தை மேம்படுத்த விரும்புகிறோம் என்று டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.

இப்போது நாங்கள் இதன் தொடர்பில் செயல்திட்டத்தை வரைந்து வருகிறோம்.   விலையை உயர்த்தும் திட்டம் (பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு) குறைவான பயனைத் தருகிறது. எனவே பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்டு  இதன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

பிரச்சாரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும்  விழிப்புணர்வு  இயக்கங்கள் பயனுள்ளதாக இருப்பதோடு ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2020 தொடங்கி மூன்று ஆண்டுகளில்  பிளாஸ்டிக் பைகளின் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் விதிக்கப்படும் 20 காசு கட்டணம் மூலம்  3 கோடியே 80 லட்சம் வெள்ளி வசூலிக்கப்பட்டதாக சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு  கடந்த மாதம் 10ஆம் தேதி கூறியிருந்தது.


Pengarang :