NATIONAL

உயர் வருமானம் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் உருவாக்கம்- உலக வங்கி அறிவிப்பு

ஷா ஆலம், ஆக 1-  உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் ஜூலை மாத நிலவரப்படி சிலாங்கூர்  உயர் வருமானம் கொண்ட புதிய மாநிலமாக உருவெடுத்துள்ளது என்று உலக வங்கியின் மலேசியப் பொருளாதார நிபுணர் டாக்டர் அபூர்வ சங்கி தெரிவித்தார்.

மொத்த தேசிய வருமானத்தில் (ஜி.என்.ஐ.) 14,291 அமெரிக்க டாலரை  (67,374 வெள்ளி)  சிலாங்கூர் அடைந்துள்ளது. இது மாநில அளவிலான 14,005  டாலர் (66,026 வெள்ளி ) என்ற தனிநபர் ஜி.என்.ஐ. அளவை விட அதிகமாகும்.

கோலாலம்பூர், பினாங்கு, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய நான்கு மாநிலங்களும் இதே அளவைக் கடந்தன. கூட்டரசு தலைநகர் இப்பிராந்தியத்திற்கான அதிகபட்ச அளவைக் கடந்தது 29,967  டாலரைப் (141,279 வெள்ளி) பதிவு செய்தது.

மலேசிய புள்ளி விபரத் துறையால் வெளியிடப்பட்ட ஒவ்வொரு மாநிலத்தின் 2023ஆம் ஆண்டிற்கான  மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகளின் அடிப்படையில் மலேசிய உலக வங்கி  இந்த  கணக்கீட்டைச் செய்துள்ளது.

ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு வெ.4.70 ஆக தொடர்ந்து இருக்கும் பட்சத்தில்
2030 ஆம் ஆண்டளவில் மலேசியா உயர் வருமான நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக  கடந்த மாத தொடக்கத்தில்  டாக்டர் அபூர்வா தனது எக்ஸ் பதிவில் கூறியிருந்தார்.

எனினும், நாட்டின் சராசரி வளர்ச்சி நான்கு விழுக்காடாகவும் நீண்ட கால பணவீக்க விகிதம் சுமார் இரண்டு சதவீதத்திற்கும் உட்பட்டும் இருக்கும் படசத்தில் இது சாத்தியமாகும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மலேசியா கடந்த 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உயர் நடுத்தர வருமான நிலையை அடைந்தது. ஆனால் இன்னும் அதிக வருமானத்தின் அளவை எட்டவில்லை என்பதை  இணைக்கப்பட்ட தரவுகள் காட்டுகின்றன.


Pengarang :