ANTARABANGSA

காஸாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்- அல்-ஜஸீரா செய்தியாளர்கள் இருவர் பலி

காஸா நகர், ஆக 1- காஸா மீது இஸ்ரேலியப் படைகள் நேற்று நடத்தி
வான் தாக்குதலில் கட்டார் தொலைக்காட்சி நிறுவனமான அல்-
ஜிஸீராவின் இரு செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர்.

நகரின் மேற்கிலுள்ள அய்டியா எனும் இடத்தில் கார் ஒன்றைக் குறி
வைத்து மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதலில் இஸ்மாயில் அல்-காவுல்
என்ற செய்தியாளரும் ராமி அல்-ரிஃபி என்ற கேமராமேனும்
கொல்லப்பட்டத்தாக டோஹாவைத் தளமாகக் கொண்ட அந்த செய்தி
நிறுவனம் தெரிவித்தது.

இவ்விருவரின் மரணத்துடன் சேர்த்து கடந்தாண்டு அக்டேபார் 7ஆம் தேதி
முதல் நிகழ்ந்து வரும் காஸா போரில் உயிரிழந்த செய்தியாளர்களின்
எண்ணிக்கை 165 பேராக உயர்ந்துள்ளதாக காஸாவின் அரசாங்க ஊடக
அலுவலகம் கூறியது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் முயற்சிக்கு உதவும்படி
அனைத்துலக சமூகத்தையும் ஊடக ஸ்தாபனங்களையும் தாங்கள் கேட்டுக
கொள்வதாக அந்த ஊடக அலுவலகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

தொடர்ச்சியாக நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்காக இஸ்ரேலை
அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதோடு
பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு மற்றும்
ஊடகவியலாளர் படுகொலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட
வேண்டும் என அது வலியுறுத்தியது.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் நிகழ்ந்து வரும் பாலஸ்தீனப்
போரில் இதுவரை 39,445 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு சுமார் 91,000 பேர்
காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள்
மற்றும் சிறார்களாவர்.


Pengarang :