NATIONAL

சிலாங்கூரில் 58 கோடி கன மீட்டர் நீர் கையிருப்பு- ஒன்பது மாதங்களுக்கான தேவையை ஈடுசெய்யும்

ஷா ஆலம், ஆக 1- நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள வறட்சி காலத்தின்
மாநில மக்களின் நீர் தேவையை ஈடு செய்வதற்காக சிலாங்கூர் 58 கோடி
கன மீட்டர் கச்சா நீரை கையிருப்பில் வைத்துள்ளது.

சுங்கை லாபு நீர் சேகரிப்பு குளம் (ஓ.ஆர்.எஸ்.) மற்றும் மூன்று பிரதான
வடிநிலங்களை உட்படுத்திய 100 கீழ்நிலை குளங்கள் உள்பட
மாநிலத்திலுள்ள ஏழு நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் குறைந்தது ஒன்பது
மாதங்களுகான தேவையை ஈடுசெய்யப் போதுமானது என்று லுவாஸ்
எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் இயக்குநர் ஹஸ்ரோல்நிஸாம்
ஷஹாரி கூறினார்.

ஒருங்கிணைந்த நீர் வள தகவல் மேலாண்மை முறையின் அடிப்படையில்
பார்க்கையில் மாநிலத்திலுள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம்
90 விழுக்காடாக உள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த நீர்த்தேக்கங்களில் தற்போது உள்ள மொத்த நீரின் அளவு 50 கோடி
கன மீட்டருக்கு சமமானதாகும். இந்த நீர் ஆறு மாத காலத்திற்கு தாக்குப்
பிடிக்கும். மழை மற்றும் ஆற்று நீர் போதுமான அளவு இல்லாத போது
இந்த நீரைப் பயன்படுத்த இயலும் என அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை மட்டும் நம்பியிருக்கவில்லை.
மாறாக, சுங்கை சிலாங்கூர், சுங்கை லங்காட் மற்றும் சுங்கை கிள்ளான்
வடிநிலங்களில் உள்ள கீழ் நிலை குளங்களையும் அடையாளம்
கண்டுள்ளோம். இந்த மூன்று வடிநிலங்கள் மூலம் சுமார் எட்டு கோடி கன
மீட்டர் நீரை உற்பத்தி செய்ய முடியும் என்றார் அவர்.

கச்சா நீரின் பற்றாக்குறையை மாநிலம் எதிர்நோக்கும் சூழல் ஏற்படும்
பட்சத்தில் ஒன்பது மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு நம்மிடம்
நீர் வளம் உள்ளது என அவர் மேலும் சொன்னார்.

தற்போதுள்ள நீர் கையிருப்பு நடப்புத் தேவைக்கு போதுமானது என்பதால்
தற்போதைய வறட்சி வானிலை குறித்து பொது மக்கள் அச்சமடையத்
தேவையில்லை என்று அவர் சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில்
குறிப்பிட்டார்.

எனினும், சுத்திகரிக்கப்பட்ட நீரை தினசரி 260 லிட்டர் என்ற அளவில்
மட்டுமே பயன்படுத்தும் ஆரோக்கியமான சிக்கன நடவடிக்கையை
கடைபிடிக்கும்படி பயனீட்டாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :