NATIONAL

சுக்மா- சிலாங்கூர் சார்பில் 1,182 விளையாட்டாளர்கள், அதிகாரிகள் பங்கேற்பு- 61 தங்கப் பதக்கங்களுக்கு இலக்கு

சிப்பாங், ஆக 1- சரவா மாநிலத்தில் இம்மாதம் 17 முதல் 24 வரை
நடைபெறும் மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) சிலாங்கூர்
மாநிலத்தைப் பிரதிநிதித்து 1,182 விளையாட்டாளர்களும் அதிகாரிகளும்
பங்கேற்கவுள்ளனர்.

முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்கும் விளையாட்டாளர்களின்
பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அதிகாரிகள் வரும் 6ஆம் தேதியே
சரவாவுக்கு பயணமாவர் என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

சிலாங்கூரை பிரதிநிதிக்கும் விளையாட்டாளர்களின் பெயர் இறுதி
செய்யப்பட்டு இறுதிக்கட்ட ஒருங்கிணைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. இவ்வாண்டு சுக்மா போட்டியில் சிலாங்கூர் சார்பில் 1,182
விளையாட்டாளர்களும் அதிகாரிகளும் பங்கேற்பர் என்று அவர் சொன்னார்.

முன்கூட்டியே சரவா செல்லும் அதிகாரிகள் விளையாட்டாளர்களின்
பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில் அனைத்து ஏற்பாடுகளும்
முறையாக உள்ளதை உறுதி செய்வர் என அவர் தெரிவித்தார்.

நேற்று சைபர் ஜெயா, டேவான் செமராக்கில் நடைபெற்ற சிப்பாங் மாவட்ட
நிலையிலான சிலாங்கூர் டிஜிட்டல் 1000 எனும் நிகழ்வின் தொடக்க
விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

இதனிடையே, சக்மா விளையாட்டிற்காக தயார் படுத்துவதற்கு தத்தெடுப்பு
விளையாட்டுச் சங்கங்களிடமிருந்து ஏற்பாட்டு ஆதரவு மற்றும்
நிதியுதவியை விளையாட்டாளர்கள் பெறுவர் என்றும் நஜ்வான் கூறினார்.
இந்த போட்டியில் 61 தங்கப்பதக்கங்களுடன் முதல் மூன்று இடங்களில்
ஒன்றைப் பெற சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சரவா மாநிலத்தில் நடைபெற்ற சுக்மா
போட்டியில் சரவா வெற்றியாளராக வாகை சூடியது. 2024 சுக்மா
போட்டியில் சிலாங்கூர் அணியைத் தயார் படுத்துவதற்காக மாநில அரசு
இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 80 லட்சம் வெள்ளியை
ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :