NATIONAL

ஊதியம் பெறாமல் பணி புரிந்த மூன்று வெளி நாட்டுப் பணிப்பெண்கள் மீட்பு – முதலாளி கைது

கோலாலம்பூர் ஆகஸ்ட் 1: கோலா லங்காட்டில் உள்ள பண்டார் ரிம்பாயுவில் ஒப் பிந்தாஸ் மூலம் கடந்த 6 மாதங்களாக ஊதியம் பெறாமல் பணி புரிந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று வெளிநாட்டுப் பணிப்பெண்கள் காவல்துறையினரால் மீட்கப் பட்டனர் மற்றும் ஒரு பெண் முதலாளி கைது செய்யப்பட்டார்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) புலம்பெயர்ந்தோர் கடத்தல் மற்றும் (Atipsom) D3 ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தலைமை உதவி இயக்குநர் D3 புக்கிட் அமான் SAC சோஃபியன் சாண்டோங் தெரிவித்தார்.

“30 முதல் 44 வயதுடைய இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்கள் இருவர் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் இரவு 11 மணியளவில் மாடி வீடு ஒன்றில் மீட்கப்பட்டனர்.

“பாதிக்கப்பட்டவரின் முதலாளியான 62 வயது உள்ளூர் பெண் மற்றும் 37 வயதான இந்தோனேசியப் பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் வேறொரு இடத்தில் வேலைக்காகக் காத்திருக்கும் போது சம்பளம் இல்லாமல் குறிப்பிட்ட வீட்டில் வேலை செய்ததாக நம்பப்படுகிறது.

பதிவு செய்யப்படாத பணிப்பெண் முகவர் என சந்தேகிக்கப்படும் நபர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 1,200 ரிங்கிட் சம்பளம் தருவதாக உறுதியளித்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேல் விசாரணைக்காகக் கோலா லங்காட் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :