கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – நாடு முழுவதும் 201 சுகாதார கிளினிக்குகளை, கிளினிக் சப்போர்ட் சர்வீசஸ் (பிஎஸ்கே) கீழ் பராமரிக்க 2022 முதல் ஐந்தாண்டு ஒப்பந்தத்துடன் ஆண்டுக்கு RM137 மில்லியன் சுகாதார அமைச்சகம் செலவழிக்கிறது என நாடாளுமன்றத்தில் தெரிவித்தது

பிஎஸ்கே என்பது பராமரிப்பு மற்றும் துப்புரவு சேவைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான பராமரிப்புத் திட்டமாகும் என செனட்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, 65 சுகாதார கிளினிக்குகள் RM1,156,572,795 திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

“தற்போது, சில சேவைகளுக்கு, குறிப்பாக தடுப்பு, ஊக்குவிப்பு மற்றும் நோய் தீர்க்கும் சேவைகளுக்கான தனியார் சுகாதார கிளினிக்குகளுடன் ஒத்துழைப்பு  வழங்குவதற்கான முன்மொழிவுகளை சுகாதார அமைச்சகம் ஆராய்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு வருடத்தில் ஒரு சுகாதார கிளினிக்கைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்குமான மதிப்பிடப்பட்ட செலவு, கடந்த ஐந்து ஆண்டுகளில் செலவிடப்பட்ட ஒதுக்கீடுகளின் மதிப்பு மற்றும் மிகவும் செலவு குறைந்த நடவடிக்கைகளை சுகாதார மருத்துவ சேவைகள் அவுட்சோர்ஸ் செய்வதற்கான முன்மொழிவு ஆகியவற்றை செனட்டர் லிங்கேஷ்வரன் அறிய விரும்பினார்.

இதற்கிடையில், செனட்டர் டத்தின் ரோஸ் சூர்யாதி அலங்கிற்கு பதிலளித்த அமைச்சகம், தொற்றுநோய் அச்சுறுத்தல்கள் தொடர்பாக பல்வேறு தயார்நிலை நடவடிக்கைகளை செயல் படுத்துவதாகக் கூறியது.

எந்தவொரு தொற்றுநோய் அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கான தயாரிப்புகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் உற்பத்தியில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

“அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு இணையாக நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தை உருவாக்குவது நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

“இந்த திட்டம் 11வது மலேசியா திட்டத்தின் (11MP) நான்காவது பிரிவின் (2019-2020) கீழ் பொருளாதார திட்டமிடல் பிரிவால் அங்கீகரிக்கப்பட்டது. மொத்தம் RM500 மில்லியன் செலவில் பண்டார் என்ஸ்தெக், நெகிரி செம்பிலான் பகுதியில் அமைந்துள்ள 20 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ளது.,” என்று அமைச்சு கூறியது.

கூடுதலாக, இது நிலையான இயக்க நடைமுறைகளில் தொடர்ச்சியான மேம்பாடுகளையும் அனைத்து மட்டங்களிலும் தயார்நிலை மற்றும் தொற்றுநோய்கள் தொடர்பான வழிகாட்டுதல்களையும் செயல்படுத்துகிறது.

இரண்டு வகையான கோவிட்-19 தடுப்பூசிகள், அதாவது செயலிழந்த வைரஸ் மற்றும் எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் ஆகியற்றை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐஎம்ஆர்) ஆராய்ச்சி மூலம் அமைச்சகம் உருவாக்கி வருகிறது. அவை பயன்படுத்தப்படுவதற்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஏனெனில், தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயனுள்ளவை மற்றும் பாதுகாப்பானவை என்று நிரூபிக்கப்பட வேண்டும், அதாவது, முதல் கட்டத்திற்குப் பின்னர் மூன்று மருத்துவ ஆய்வுகளுக்கு அனுப்பு வேண்டும்,” என்று அமைச்சு கூறியது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் உருவாக்கம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றால் கூட்டாக வழி நடத்தப்படுகிறது. மேலும், இது பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை உள்ளடக்கியது.

– பெர்னாமா