NATIONAL

மறுசுழற்சித் தொழிற்சாலையில் குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனை- 49 அந்நிய நாட்டினர் கைது

புத்ராஜெயா, ஆக 1- கோலக் கிள்ளான், செலாட் கிளாங் உத்தாரா தொழில்
பேட்டைப் பகுதியில் உள்ள மின்னியல் பொருள் மறுசுழற்சித்
தொழிற்சாலையில் குடிநுழைவுத் துறை கடந்த செவ்வாய்க்கிழமை
மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 49 அந்நிய நாட்டினரும் ஒரு
உள்நாட்டுப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 23 வங்காளதேச ஆடவர்கள், 17 மியன்மார்
பிரஜைகள், ஒரு நோப்பாள நாட்டவர், ஒரு சீன பிரஜை, ஐந்து மியன்மார்
பெண்கள் வியட்னாம் மற்றும் சீனாவைச் சேர்ந்த தலா ஒரு பெண்ணும்
அங்குவர். இவர்கள் அனைவரும் 20 முதல் 46 வயதுக்குட்பட்டவர்களாவர்.

பொது மக்கள் கொடுத்த தகவல் மற்றும் குடிநுழைவுத் துறை கடந்த இரு
மாதங்களாக மேற்கொண்ட உளவு நடவடிக்கையின் வாயிலாகப் பெண்மணி
ஒருவரின் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் அந்த தொழிற்சாலையில்
பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சோதனை நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர்
டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.

அச்சோதனையில் ஆறு வங்காளதேச ஆடவர்கள் தற்காலிக வருகை
அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி அந்த தொழிற்சாலையில் வேலை
செய்து வந்துள்ளது கண்டறியப்பட்டது. மேலும் இரு வங்காளதேசிகள்
அனுமதிக்கப்பட்டதை விட நீண்ட நாட்கள் நாட்டில் தங்கியுள்ளனர். மற்ற
அனைவரும் எந்த ஆவணத்தையும் கொண்டிருக்கவில்லை என்ற அவர்
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இச்சேதனை நடவடிக்கையின் போது அந்த தொழிற்சாலையிலிருந்து
ஊராட்சி மன்ற லைசென்ஸ், மலேசிய நிறுவன ஆணைய சான்றிதழ்,
வர்த்தகப் பதிவு, பத்து வங்காளதேச கடப்பிதழ்கள், இரு கைபேசிகள், ஒரு
கணினி, 22 ஊழியர் வருகை பதிவு அட்டைகள், 2,900 வெள்ளி ரொக்கம்
ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.

கோல கிள்ளான் துறைமுகம் வழியாக பல்வேறு நாடுகளிலிருந்து வரும்
மின்னியல் பொருள்களைப் பிரித்து அதிலுள்ள செம்பு மற்றும்
அலுமினியத்தை பிரிக்கும் தொழிலில் இந்த தொழிற்சாலை ஈடுபட்டு
வந்தது என்றார் அவர்.


Pengarang :