ANTARABANGSA

கேரளா நிலச்சரிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 256 பேராக உயர்வு

புது டில்லி, ஆக 1 – தென்னிந்திய மாநிலமான கேரளாவில் கடந்த  செவ்வாய்கிழமை  ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 256 பேராக உயர்ந்துள்ளது என்று அம்மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜோர்ஜ் இன்று கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து  மழை பெய்து வருவதோடு  நிலச்சரிவில்  இறந்தவர்களின் உடல்கள் இன்னும் மண்ணில்  புதையுண்டிருப்பதால் அப்பகுதியில் தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதே மாநில அரசின் முக்கிய கவனமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதுவரை 256 உடல்கள் மீது பிரேத பரிசோதனை செய்துள்ளோம். அவற்றில் மனித உடல் உறுப்புகளும் அடங்கும். 154 சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித உடல் உறுப்புகளின் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இறந்தவர்கள் உடல்களில்  டிஎன்ஏ சோதனைகளும் நடத்தப்படுகின்றன. பிற்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண இது உதவும் என அவர் சொன்னார்.

நான் மருத்துவமனைகள் மற்றும் நிவாரண முகாம்களை பார்வையிட்டேன்.   பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியாக  ஆதரவை வழங்குவதிலும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறோம் என்று ஜார்ஜ் கூறினார்

இந்தப் பேரிடரில் மேலும் 220 பேரைக் காணவில்லை எனக் கூறிய அவர்,  இடிபாடுகளிலிருந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது என்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமைக் அதிகாலை பலத்த மழைக்கு மத்தியில் இரண்டு மணி நேரத்திற்குள் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி பகுதியில் மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அந்த தென் மாநிலத்தில் சமீப காலங்களில் நிகழ்ந்த மிகப்பெரிய சோக நிகழ்வாக இது கருதப்படுகிறது.

இயற்கைப் பேரிடரில் வீடிழந்தவர்களுக்கு  உதவும் நோக்கில்  மாநில அரசு நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. இந்த நிவாரண முகாம்களில் தற்போது 3,500க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.


Pengarang :