சுபாங் விமான நிலைய நடவடிக்கை  விரிவாக்கம்  பராமரிப்புச் சேவைகள் வலுப்படுத்தும் 

ஷா ஆலம், ஆக 3  சுபாங்கிலுள்ள – சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தில்  ஆறு விமான நிறுவனங்கள் சேவையை மீண்டும் தொடங்குவது விமானங்கள் சம்பந்தப்பட்ட பராமரிப்பு,  மற்றும் பழுதுபார்ப்புச் சேவைகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுபாங்  விமானப் நிலையத்தில் போக்குவரத்துத் துறையின் சேவை  அதிகரிப்பைப் பயன்படுத்தி சிலாங்கூரில் வான்போக்குவரத்துத் துறையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மாநில அரசாங்கம் தீவிரப்படுத்தும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு  மாநில  உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

மலேசியாவில் செயல்படும்  வான்போக்குவரத்து தொடர்பான 250 நிறுவனங்களில்  67 விழுக்காடு சிலாங்கூரைத் தளமாகக் கொண்டுள்ளன. அவை    செரண்டா, சிப்பாங் மற்றும் சுபாங் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன என அவர் சொன்னார்.

செரண்டாவில் உள்ள யு.எம்.டபள்யூ. ஏரோஸ்பேஸ் போன்ற முதல்நிலை தொழில்துறைகளை சிலாங்கூர் கொண்டுள்ளது. இது போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ரோல்ஸ் ரோய்ஸ் ட்ரெண்ட் 1000 மற்றும் ட்ரெண்ட் 7000 விமான இயந்திரங்களுக்கான உறைகளை உருவாக்குகிறது.

எனவே, சுபாங்கில் ஆறு விமான நிறுவனங்கள் சேவையை  மீண்டும் தொடங்குவது சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் விமானத் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு போன்ற வான்போக்குவரத்து துறையின் வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று அவர் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி ஆறு விமான நிறுவனங்கள்  சுபாங் விமான நிலையத்தில்  ஒற்றை நடைபாதை கொண்ட  விமானங்களைப் பயன்படுத்தி மீண்டும் சேவையைத் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கடந்த மாதம் கூறியிருந்தார்.

ஃபயர்பிளை, ஏர் ஆசியா மலேசியா, பாத்தேக் ஏர் மலேசியா, எஸ்கேஎஸ் ஏர்வேஸ், டிரான்ஸ்நுசா மற்றும் ஸ்கூட் பிரைவேட் லிமிடெட்  ஆகியவையே சுபாங்கிலிருந்து செயல்படும் அந்த ஆறு விமான நிறுவனங்களாகும் .

விமான நிலையம் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளதால் அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விமானச்  சேவை நடைபெறும் என்றும்  அந்தோணி லோக் தெரிவித்தார்.


Pengarang :