NATIONAL

2025 பட்ஜெட்டில் வாழ்க்கைச் செலவினம், கார்டெல் விவகாரங்களுக்கு முன்னுரிமை- பிரதமர்

புத்ராஜெயா, ஆக 6 – எதிர்வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி மக்களவையில்
தாக்கல் செய்யப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தில் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு தொடர்பான
விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தாம் விரும்புவதாகப் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு எப்போதும் மக்களின் கவலைக்குரிய
விஷயமாக இருந்து வருவதோடு அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
சௌகர்யத்தை ஏற்படுத்தித் தருவது அரசாங்கத்தின் கடமையாக உள்ளது
என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.

சீனி, சமையல் எண்ணெய், மாவு, எரிபொருள் மிகவும் விலை
குறைந்தவையாக இருந்த போதிலும் மக்கள் இன்னும் சுமையை
உணர்கின்றனர்.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நாம் விவாதிக்கும் விஷயங்கள்
தவிர்த்து கார்டெல் (முறையற்ற வணிகக் கூட்டமைப்பு) வர்த்தகத்தில்
ஏகபோக ஆதிக்கம் மற்றும் பொருள் விலையேற்றம் தொடர்பான
விவகாரங்களுக்குத் தீர்வு காண விரும்புகிறோம் என அவர் சொன்னார்.

இன்று இங்கு நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும்
நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நிதியமைச்சு மற்ற அமைச்சுகளுடன் இணைந்து வாழ்க்கைச் செலவின
அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும்
என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வீண் விரயம், ஊழல், பதுக்கல் மற்றும் முறையற்ற வணிகக் கூட்டமைப்பு
உள்ளிட்ட காரணங்களால் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு
ஏற்படுவதாகவும் அன்வார் சொன்னார்.

அமலாக்கம் மற்றும் திட்டமிடல் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பில்
உள்ள நீங்கள் செலவினத்தைக் குறைப்பதற்கான வழிவகைகளை
ஆராயாமலிருப்பதற்கு சாத்தியமே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :