NATIONAL

மெர்டேக்கா மாதத்தை முன்னிட்டு 23 நிகழ்வுகளுக்கு எம்.பி.பி.ஜே. ஏற்பாடு

பெட்டாலிங் ஜெயா, ஆக  6 –  மெர்டேக்கா மாதத்தை முன்னிட்டு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம்  (எம்பிபிஜே) எதிர்வரும் செப்டம்பர் 22 வரை 23 அற்புதமான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர்களிடையே தேசிய தின உணர்வைத் தூண்டுவதையும் வலுவான ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்றை வளர்ப்பதையும் இந்த நிகழ்ச்சிகள்  நோக்கமாகக் கொண்டுள்ளன என்று டத்தோ பண்டார் முகமது ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.

நாட்டின்  67வது தேசிய தினத்தை முன்னிட்டு  பெட்டாலிங் ஜெயா நிலையிலான தேசியக் கொடியை பறக்கவிடும் நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாங்கள் அனைவரையும்  அழைக்கிறோம். ஜாலூர் ஜெமிலாங்கை பெருமையுடன் பறக்க விடுவோம் என்றார் அவர்.

தேசிய தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்ட முக்கிய நிகழ்வுகளில்  நாட்டுப்பண் போட்டி, ஜாலூர் ஜெமிலாங் அலங்காரப் போட்டி, பி.ஜே. ஹால்ஃப் மாரத்தான், பி.ஜே. இன்டோர் ஸ்மார்ட் கோல்ப், ஈகோ ஃப்ரீ மார்க்கெட், ஜோகத்தான் மற்றும் வாக்கத்தான் ஆகியவையும் அடங்கும்.

முன்னதாக, மாநகர் மன்றத்தின் விவேகப் பங்காளிகளான  சமூக நலத்துறை, பென்குருசன் ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் பள்ளிகள் மற்றும் பல்வேறு சங்கங்கள் உட்பட  சமூக அமைப்புகளுக்கு 2,000 மலேசியா கொடிகளை ஜாஹ்ரி விநியோகித்தார்.


Pengarang :