ANTARABANGSA

பாலஸ்தீனப் போரில் இதுவரை 10,000 மாணவர்கள் பலி

காஸா, ஆக 7- காஸா தீபகற்பம் மற்றும் மேற்கு கரையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 10,043 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 16,432 பேர் காயமடைந்துள்ளனர்.

காஸா தீபகற்பத்தில் மட்டும் 9,936 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15,897 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு கல்வியமைச்சை மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) குறிப்பிட்டுள்ளது.

அதே சமயம் மேற்கு கரையில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 107 பேராக உள்ள வேளையில் 526 பேர் காயமடைந்துள்ளனர் என்று அது கூறியது.

மேலும், காஸா தீபகற்பத்தில் 504 ஆசிரியர்களும் நிர்வாகப் பணியாளர்களும் பலியான நிலையில் 3,426 பேர் காயமடைந்துள்ளனர். மேற்கு கரையில் 117 பேர் இஸ்ரேலிய இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர் என  அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

காஸா தீபகற்பத்தில் 119 பள்ளிகள் மிக மோசமாக சேதடைந்துள்ளன. மேலும் 62 பள்ளிகள் முற்றாக அழிக்கப்பட்டன. இவை தவிர அரசாங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டிலான 191 பள்ளிகள் குண்டு வீச்சுத் தாக்குலுக்கு இலக்காகியுள்ளன.

இந்த போரில் 20 பல்கலைக்கழகங்கள் மோசமாக சேதடைந்துள்ளதோடு மேலும் 31 பல்கலைக்கழக கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. மேற்கு கரையில் 69 பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டு ஐந்து உயர்கல்விக் கூடங்கள் பல முறை சூறையாடப்பட்டன.

காஸா தீபகற்பத்தில் 620,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களில் 39,000 பேர் இடைநிலைப்பள்ளி மாணவர்களாவர். அவர்களில் பலர் மனோரீதியான மற்றும் உடல்  ரீதியான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.


Pengarang :