ANTARABANGSA

வங்காளதேசத்தில் இடைக்கால அரசு இன்று இறுதி செய்யப்படும்- போராட்டக்காரர்கள் நம்பிக்கை

டாக்கா, ஆக. 7 – மாணவர்கள் நடத்திய கிளர்ச்சியின் எதிரொலியாக   ஷேக் ஹசீனா பிரதமர் ராஜினாமா செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றதைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இன்று இறுதி செய்யப்படுவார்கள் என்று தாங்கள் எதிர் பார்ப்பதாக வங்களாதேசத்தின் போராட்டத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்காளதேச அதிபர்   இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக யூனுஸை நியமனம் செய்து மாணவர்களின் முக்கிய கோரிக்கையை பூர்த்தி செய்தார். மேலும் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க மீதமுள்ள உறுப்பினர்களை விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 பேரைப் பலி கொண்டு  ஆயிரக்கணக்கானவர்களை காயப்படுத்திய பயங்கர வன்முறையைத் தொடர்ந்து கடந்த  திங்களன்று வங்காளதேச இராணுவத் தலைவர்   தொலைக்காட்சியில்   தோன்றி  ஹசீனாவின் ராஜினாமாவை அறிவித்ததைத் தொடர்ந்து  அங்கு ஏற்பட்ட அதிகார வெற்றிடத்தை இந்த இடைக்கால அரசாங்கம் நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹசினாவின் ராஜினாமா நாடு முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தப்பி ஓடிய பிறகு அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் மக்கள் எதிர்ப்பின்றி நுழைந்தனர். சமீபத்திய ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியை அனுபவித்த 17 கோடி வங்காளதேச  மக்கள் இரண்டாவது புரட்சியின் மூலம் நாட்டின் 15 ஆண்டுகால  அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

திங்கட்கிழமை குழப்ப நிலைக்குப்  பிறகு இயல்பு நிலை மெதுவாக நாடு திரும்பத் தொடங்கியுள்ளது. ஆயினும்,  இன்று டாக்கா சுற்று வட்டாரத்தில் புதிய போராட்டங்கள் வெடித்தன. மத்திய வங்கியின் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் அதன் நான்கு துணை ஆளுநர்களை ஊழல் குற்றச்சாட்டுக்காக ராஜினாமா செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள்  கட்டாயப்படுத்தியதாக  அந்நாட்டின் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

வங்காளதேசத்துடன்  வலுவான கலாச்சார மற்றும் வணிக உறவுகளை கொண்ட மாபெரும் அண்டை நாடான இந்தியா, அனைத்து அத்தியாவசியம் இல்லாத  ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அதன் தூதரகம் மற்றும் நாட்டில் உள்ள நான்கு துணைத் தூதரகங்களில் இருந்து வெளியேற்றியதாக இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.


Pengarang :