SELANGOR

செமினியில் கொள்ளை- ஐந்தாவது சந்தேக நபரை போலீசார் அடையாளம் கண்டனர்

பெட்டாலிங் ஜெயா, ஆக. 7-  கடந்த மாதம்  31ஆம் தேதி செமினியில் நிகழ்ந்த  ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய  ஐந்தாவது சந்தேக நபரை அரச  மலேசிய போலீஸ் படை  அடையாளம் கண்டுள்ளது.

நாட்டில் இன்னும் இருப்பதாக நம்பப்படும் அந்த  சந்தேக நபரை தாங்கள் தீவிரமாக தேடி வருவதாக  சிலாங்கூர் மாநில  காவல் துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் கூறினார்.

ஆரா டாமன்சாரா காவல் நிலையத்தில்  இன்று வழக்கு சாட்சிப் பொருள்களை அழிக்கும் நிகழ்வைப் பார்வையிட்டப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர்  இதனைச் சொன்னார். பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிசாம் ஜாஃபரும் இதில் கலந்துகொண்டார்.

இதனிடையே,  இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப் பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களின் தடுப்புக் காவல் அனுமதி  இன்றும் நாளையும் முடிவடையும் நிலையில்  தடுப்புக்காவலை   நீட்டிக்க தமது தரப்பு விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜாலான் சுங்கை பென்னிங், கம்போங் பாசீர் செமினி எனுமிடத்திலுள்ள ஒரு வீட்டில் கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் பொது நடவடிக்கைப் பிரிவின் (பி.ஜி.ஏ.) மூன்று உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். மற்றொரு சந்தேக நபர் கைது மறுநாள் செய்யப்பட்டார்.

மற்றொரு நிலவரத்தில் கெத்தும்  என நம்பப்படும் தடைசெய்யப்பட்ட பொருளை வைத்திருந்ததற்காக செராஸ் மத்திய படைத் தலைமையகத்தைச் சேர்ந்த பி.ஜி.ஏ. உறுப்பினர் ஒருவர் 1952ஆம் ஆண்டு விஷச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டதை ஹூசேன் உறுதிப்படுத்தினார்.


Pengarang :