NATIONAL

ஜவுளி அருங்காட்சியகத்தை நிறுவ சிலாங்கூர் அரசு திட்டம்

பட்டாணி, ஆக. 8 – சிலாங்கூர் மாநிலத்தின்  செழிப்புமிக்க ஜவுளிப் பாரம்பரியத்தை பாதுகாக்கும் முயற்சியாக  ஜவுளி அருங்காட்சியகத்தை விரைவில் நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

சிலாங்கூர் ஜவுளி அருங்காட்சியகம் எனப்படும் இந்த  அருங்காட்சியகம் டெலெபுக், கெலிங்கான், சோங்கெட் மற்றும் சிலாங்கூர் பாத்தேக் உள்ளிட்ட சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பாரம்பரிய ஜவுளிகளைக் காட்சிப் படுத்தும் என்று கலாச்சாரம் மற்றும் வீடமைப்புத்  மாநில ஆடசிக் குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா கூறினார்.

மாநில அரசு தேவையான நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளதால்  இந்த அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கு  பொருத்தமான இடத்தை நாங்கள் தற்போது   தேடி வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மற்றும் தாய்லாந்து  கலப்பு -கலாச்சார நிகழ்ச்சியை முன்னிட்டு  நேற்று இங்குள்ள யாரிங் பாத்தேக் தொழிற்சாலை மற்றும் பாரஹோம் சந்தையைப் பார்வையிட்டப்  பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த அருங்காட்சியகத்தில் ஒரு நெசவு இல்லம் மற்றும் பாத்தேக் தயாரிப்பது உட்பட பல நடவடிக்கைகள் காட்சிப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த வருடாந்திர நிகழ்வில் சிலாங்கூரின் கலை மற்றும் கலாச்சாரத்தை சர்வதேச அரங்கில் ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசியான் நாடுகளுக்கு வருகைகள் புரிவது உள்ளிட்ட  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


Pengarang :