NATIONAL

தேசிய தின நிகழ்வை முன்னிட்டு 7,600 கார் நிறுத்துமிடங்கள் தயார்- 80 பஸ்கள் சேவையில் ஈடுபடும் 

கோலாலம்பூர், ஆக. 8 – எதிர்வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி டத்தாரான் புத்ரா ஜெயாவில் நடைபெறும் 2024  தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு  பொதுமக்களின் வசதிக்காக 7,600 க்கும் மேற்பட்ட வாகன நிறுத்துமிடங்கள்  ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

இது தவிர, 80  பஸ் சேவைகளும் பொதுமக்களின் வசதிக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய தினம் மற்றும் மலேசியா தினம், மெர்டேகா 360 ஆகிய கொண்டாட்டங்கள் தொடர்பான பொழுதுபோக்கு தகவல் சமூக தளத்தில் பதிவேற்றப்பட்ட போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் அமர்வதற்கு ஏதுவாக 8,000 அடுக்கு  இருக்கைகள் மற்றும் 40 உணவு டிரக் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

‘மலேசியா மடாணி: ஜிவா மெர்டேக்கா’ என்ற கருப் பொருளிலான இந்த 67வது தேசிய தினத்தை முன்னிட்டு  காலை 7.00 மணி தொடங்கி இடம்பெறும்  பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

அந்த நிகழ்வுகளில்  பிராஸ்பென் உருவாக்கப் படைப்பு,  பாதுகாப்புப் படைகளின் இராணுவ வாகன அணிவகுப்பு,  அலங்கார வாகன ஊர்வலம்,  மற்றும் மலேசிய ஆயுதப் படைகளின்  வான் சாகசம் ஆகியவையும் அடங்கும்.

தேசிய தின கொண்டாட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை பொதுமக்கள்  http://www.merdeka360.my  எனும் அகப்பக்கம் வழி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :