NATIONAL

கோலக் கிள்ளானில் கடல் பெருக்கு அபாயம்- எச்சரிக்கையுடன் இருக்க பொது மக்களுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், ஆக. 8 – எதிர்வரும் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை கோலக் கிள்ளான் நிலையத்தில் கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்கும் படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கடலில் அலைகள் 4.8 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) கூறியது.

கோலக் கிள்ளான் நிலையத்தில் நாளை இரவு 8.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அலைகள் 4.6 மீட்டர் வரை உயரும் என மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், பண்டார் கிள்ளான் மற்றும் செலாட் முவாரா நிலையங்களில் நீர் மட்டம் 3 மீட்டர் வரை உயர்ந்து அபாய அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வடிகால் மற்றும் நீர் பாசனத்துறையின் வெள்ளத் தகவல் அகப்பக்கம் தெரிவித்தது.

நேற்றிரவு 9.00 மணி வரை பண்டார் கிள்ளான் நிலையத்தில் நீர் மட்டம் 2.8 மீட்டராகவும்  செலாட் முவாரா நிலையத்தில் 2.75 மீட்டராகவும் எச்சரிக்கை அளவில் இருந்தது.

இதனிடையே, இந்த கடல் பெருக்கு காரணமாக கடல் நீர் பெருக்கெடுத்து கரையில் நுழைந்து வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகத் தேசிய ஹைட்ரோகிராபி மையம் முன்னதாகக் கூறியிருந்தது.

இந்த இயற்கைச் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு மிகுந்த விழிப்புடன் இருக்கும் படி கடலோரங்களில் வசிக்கும் மக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். வானிலை நிலவரங்களை அவர்கள் அணுக்கமாக கவனித்து வரும் அதேவேளையில் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசு நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Pengarang :