NATIONAL

புறநகர்ப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெ.1,049 கோடி ஒதுக்கீடு – துணைப் பிரதமர் தகவல்

புத்ராஜெயா, ஆக. 8 – புறநகர்ப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்த கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம்
வரை அரசாங்கம் 2,049 கோடி வெள்ளியை செலவிட்டுள்ளது.

பூர்வக்குடியினர் குடியிருப்புகள் மற்றும் உட்புறப் பகுதிகளில் சாலைகள்,
மின் விநியோகம், நீர், மற்றும் சமூகவியல் மையங்களை அமைப்பதற்கு
இந்த நிதி செலவிடப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது
ஜாஹிட் ஹமிடி கூறினார்.

புறநகர் மக்களின் வளப்பம் மற்றும் மேம்பாடு மீது அரசாங்கம்
கொண்டுள்ள அக்கறையை இந்த பெரும் தொகையை உட்படுத்திய
ஒதுக்கீடு புலப்படுத்துகிறது என்று கிராம மற்றும் வட்டார மேம்பாட்டு
அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

உயர் தரத்திலான அடிப்படை வசதிகள் மூலம் முதலீட்டை ஈர்க்க
முடியும். இதன் வாயிலாக அதிக வேலை வாய்ப்புகளை
உருவாக்கவும் நீடித்த வேளாண் நடைமுறைகளை அமலாக்கவும் இயலும்
என அவர் குறிப்பிட்டார்.

இன்று 2024ஆம் ஆண்டு தேசிய நிலையிலான கிராம திட்டமிடல்
மற்றும் மேம்பாடு மீதான ஆய்வரங்களைத் தொடக்கி வைத்து
உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில்
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங்கும்
கலந்து கொண்டார்.

ஒரு தேசத்தின் சமுகப் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதில்
புறநகர் உள்கட்டமைப்பு மேம்பாடு எவ்வளவு முக்கியமானது என்பதை
தாம் உணர்ந்துள்ளதாக ஜாஹிட் தெரிவித்தார்.

சாலைகள், பாலங்கள், சுகாதார வசதிகள், பள்ளி மற்றும் இணைய இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய தரமான உள்கட்டமைப்பு புறநகரின் ஆக்ககரமான மேம்பாடிற்கான அடித்தளமாக விளங்குகின்றன என்றார் அவர்.

சிறப்பான அடிப்படை வசதிகள் மூலம் சந்தைக்கான சிறப்பான அணுகலை
உறுதிப்படுத்த இயலும். இதன் வழி விவசாயிகள் தங்களின் உற்பத்திப்
பொருள்களை விரைவாகவும் அதிக விலையிலும் விற்பதற்குரிய வாய்ப்பு
கிட்டும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :