NATIONAL

இரயில் தண்டவாள நிர்மாணிப்பு பகுதிகளில் ஸ்பான் அதிரடிச் சோதனை- வெ.400,000 நீர் திருட்டு அம்பலம்

கோலாலம்பூர், ஆக. 9 – கோம்பாக் மாவட்டத்தின் தாமான் மெலாத்தி
மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டத்தின் செரெண்டாவில் உள்ள இரயில்
தண்டவாள கட்டுமானப் பகுதிகளில் தேசிய நீர் சேவை ஆணையம்
(ஸ்பான்) நேற்று மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் சட்டவிரோதமான
முறையில் இணைப்பை ஏற்படுத்தி நீரைத் திருடிய சம்பவம்
அம்பலத்திற்கு வந்தது.

அவ்விரு இடங்களிலும் ஏற்படுத்தப்பட்ட சட்டவிரோத இணைப்பின் மூலம்
கடந்த ஓராண்டு காலத்தில் 410,000 வெள்ளி மதிப்புள்ள 250,000 கன மீட்டர்
சுத்திகரிக்கப்பட்ட நீர் திருடப்பட்டது கண்டறியப்பட்டது என ஸ்பான்
அமலாக்கப் பிரிவின் இயக்குநர் அய்னால் யுஸ்மான் முகமது கூறினார்.

பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து
கிடைத்த புகாரின் அடிப்படையில் அவ்விரு பகுதிகளிலும் திடீர் சோதனை
மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

தாமான் மெலாத்தியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 25 மில்லி
மீட்டர் மற்றும் 32 மில்லி மீட்டர் குழாய்களைக் கொண்டு ஆயர் சிலாங்கூர்
நிறுவனத்தின் பிரதான குழாயிலிருந்து இரு நேரடி இணைப்புகள்
ஏற்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அந்த கட்டுமானப் பகுதியில் உள்ள தற்காலிக ஊழியர் குடியிருப்பு
பகுதியுடன் அந்த குழாய்கள் இணைப்பைக் கொண்டிருந்ததாகக் கூறிய
அவர், இங்கு சுமார் 300,000 வெள்ளி மதிப்புள்ள 175,000 கன மீட்டர் நீர்
சட்டவிரேதமான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என
மதிப்பிடப்படுகிறது என்றார் அவர்.

செரெண்டாவில் உள்ள கட்டுமானத் தளத்தில் நீரைத் திருடுவதற்கு 25 மில்லி மீட்டர் குழாய் பயன்படுத்தப்பட்டதாகவும் அக்காலக்கட்டத்தில் 110,000 வெள்ளி மதிப்பிலான 75,000 கன மீட்டர் நீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிக லாபத்தை ஈட்டும் நோக்கில் சம்பந்தப்பட்ட கட்டுமானத் தரப்பினர்
இந்த நீர் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தாங்கள் சந்தேகிப்பதாக
அவர் தெரிவித்தார்.


Pengarang :